வாஷிங்டன் – பல ஆளில்லா சிறிய விமானங்களைச் செலுத்தி சோமாலியாவில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது கடந்த சனிக்கிழமை அமெரிக்கா தொடுத்த தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட அல்-ஷாபாப் இயக்கத்தின் போராளிகள் கொல்லப்பட்டனர் என அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பெண்டகன் அறிவித்துள்ளது.
ராசோ கேம்ப் எனக் குறிப்பிடப்படும் அந்தப் பகுதியை பல வாரங்களாகத் தாங்கள் கண்காணித்து வந்ததாகவும், அங்கு நடைபெற்று வந்த பயிற்சி ஏதோ ஒரு பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பயிற்சியாளர்களைத் தயார்ப்படுத்தி வந்ததும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சோமாலிய நகரான மொகாடிஷூவில் இருந்து சுமார் 193 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த பயங்கரவாத பயிற்சி முகாமைத் தாக்க, எறிபடைகளும், வெடிகுண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 200 பயங்கரவாதத் தாக்குதல்காரர்களைக் கொண்டிருந்த இந்த பயிற்சி முகாம் முற்றாக அழிக்கப்பட்டது என்றும் இதில் பொதுமக்கள் யாரும் பாதிப்படையவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.