பெங்காளூர் – பிரபல தெலுங்கு நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் இந்தபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பாலகிருஷ்ணா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர் ஆவார். இவர் ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த ‘சாவித்திரி’ என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசும் போது, ஒரு பெண் பின்னால் கதாநாயகர் அலைவது போல் நான் நடித்தால் எனது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு பெண்ணை பிடித்து இருந்தால் உடனே முத்தம் கொடுத்து விட வேண்டும். இல்லையேல் கர்ப்பிணியாக்கி விட வேண்டும். இதைத்தான் எனது ரசிகர்கள் விரும்புவார்கள் என்று பேசினார்.
அவரது பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பெண்களை பற்றி இழிவாக பேசிய பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நடிகை ரோஜாவும் கண்டித்து இருந்தார்.
இந்த நிலையில் பெண்களை இழிவாக பேசியதாக கூறி பாலகிருஷ்ணா மீது வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு குழுவைச் சேர்ந்தவரகள் போலீசில் புகார் செய்தனர். பெண்களை நடிகர் பாலகிருஷ்ணா போதை பொருளாக கருதுகிறார். எங்களுக்கும் பெண் குழந்தைகள் உள்ளது. அவரது பேச்சு வேதனை அளித்ததால் போலீசில் புகார் செய்தேன் என்று வழக்கறிஞர் ரவி தெரிவித்தார்.
பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த நடிகர் பாலகிருஷ்ணா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நான் பெண்களை மதிப்பவன். நான் சினிமாவில் நான் எப்படி இருக்க வேண்டும் என்ற எனது ரசிகர்கள் எண்ணத்தைத்தான் வெளிப்படுத்தினேன். நிஜ வாழ்க்கையில் நான் அப்படி அல்ல.
அப்படி எனது தந்தை என்னை வளர்க்கவில்லை. நான் கூறிய கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.