வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு அண்மையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் டாக்டர் ரோனி ஜாக்சன், அவரது உடல்நிலை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிபரின் உடல்நிலை முன்பைக் காட்டிலும் இன்னும் கூடுதலான ஆரோக்கியத்துடன் இருக்கின்றது. அவர் பின்பற்றிய ஆரோக்கியமான உணவுப்பழக்கமும், தொடர்ச்சியான உடற்பயிற்சிகளும் அவரது உடலில் கொழுப்புகளை சேர விடாமல், தசைகளை வலுவடையச் செய்துள்ளது. அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் அவர் மிகுந்த ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
54 வயதான ஒபாமா கடந்த 2009-ம் ஆண்டு பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதியோடு நிறைவடைகின்றது.
1.87 மீட்டர் உயரம் உள்ள ஒபாமா தனது உடல் எடையை 79 கிலோவிலேயே நிலைநிறுத்தி வருகின்றார். அவரது இதயம் நிமிடத்திற்கு 56 முறை துடிக்கின்றது என்பதோடு, அவரது இரத்த அழுத்தம் 110/68-லேயே உள்ளது என்று டாக்டர் ரோனி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், அவரது பார்வை 20/20 என்ற நிலையிலும், தலை முதல் பாதம் வரையில் எல்லா உடல் உறுப்புகளும் இயல்பு நிலையில் இயங்குகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
அவ்வப்போது இன்ப்ளூயன்சா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஒபாமா, தினமும் விட்டமின் டி எடுத்துக் கொள்கிறார்.
முன்பு புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்த அவர், தற்போது எப்போதாவது நிக்கோடின் மெல்லும் கோந்தை உபயோகிக்கிறார். தேவையான போது மட்டும் அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் நீங்க மருந்து உட்கொள்கிறார்.
மேலும், வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, கொசுக்கடியால் ஏற்படும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்கிறார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில், ஒபாமாவில் உடல்நிலை இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம் அவரின் கட்டுப்பாடான வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கங்களும் தான் என்று டாக்டர் ரோனி தெரிவித்துள்ளார்.