கோல திரெங்கானு – தனது தலைமைத்துவத்தையோ அல்லது பாரிசான் தலைமையிலான மாநில அரசாங்கத்தையோ கவிழ்க்க நினைப்பவர்களை தான் எதிர்க்கொள்ளத் தயார் என்று திரெங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் ராசிஃப் அப்துல் ரஹ்மான் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் தவறான நோக்கத்துடன் அது பொன்ற முயற்சிகளை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நேற்று நடந்த மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய அகமட் ராசிஃப் , “என்னை வெளியேற்றும் நோக்கம் கொண்டவர்களே, கவனமாகக் கேளுங்கள். நான் பயப்படவில்லை. நான் தளர்ந்து போக மாட்டேன். மக்களுக்காகவும், கட்சிக்காகவும் போராடுவேன். கீழே விழ நான் அனுமதிக்க மாட்டேன் இது சத்தியம்”
“எவ்வளவு கடினமான சோதனைகள் வந்தாலும், நான் கைவிட மாட்டேன். என்னுடைய குழுவையும், இந்த மாநிலத்தையும், மக்களின் நலனையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் திரெங்கானு சட்டமன்றத்தில் அம்னோ சட்டமன்ற உறுப்பினரும், அந்த மாநிலத்தின் முன்னாள் மந்திரிபெசாருமான, டத்தோஸ்ரீ அகமட் சைட் அதிரடியாக நடப்பு மந்திரி பெசார் அகமட் ராசிஃப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
பின்னர் அத்தீர்மானம், திரெங்கானு சட்டமன்ற சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.