சென்னை – தமிழகத்தில் பாஜக கூட்டணியில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த தயார் என வெளியான செய்தியை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக சென்னை வந்த பிரகாஷ் ஜவடேகர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவடேகர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என்றார்.
ஆனால், இச்சந்திப்பு குறித்து தேமுதிக வெளியிட்ட படத்துக்கான விளக்கத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 59 இடங்கள் உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு பாஜக தயார் என பிரகாஷ் ஜவடேகர் கூறியதாக இணையளத்தில் செய்தி வெளியானது. அந்த செய்தியை மறுத்துள்ள பிரகாஷ் ஜவடேகர் தான் அப்படி ஏதும் பேட்டி அளிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாக வந்த செய்தி உண்மையல்ல என்றார். மாநில தலைமைக்கு தெரியாமல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.