கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை விமர்சித்தும், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் படியும் கோரிக்கை விடுத்து மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள அம்னோ தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
“இல்லை.. இல்லை.. அது போன்ற சிறுபிள்ளைத்தனமானவர்களைப் பற்றி எல்லாம் நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்? அவர்கள் குழந்தைகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்” என அட்னான் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், டான்ஸ்ரீ மொகிதின் யாசின், சஃபி அப்டால் ஆகிய இருவரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். அப்போது துணைப்பிரதமர் பதவியிலிருந்து மட்டும் நீக்கப்பட்ட மொகிதின், அதன் பின்னர் அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில், நஜிப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டான்ஸ்ரீ மொகிதின் யாசின், சஃபி அப்டால், ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் ஆகியோர் மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.