கோலாலம்பூர் – பாடலாசிரியரும், எழுத்தாளருமான கபிலன் வைரமுத்து இன்று தனது பேஸ்புக் பக்கத்தில், தனது அண்ணன் மதன் கார்க்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளதோடு, தனது அண்ணனுடனான பால்ய வயது நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.
கபிலன் தனது பதிவில் கார்க்கி பற்றி கூறியிருப்பதாவது:-
“உனக்கு ஏழு. எனக்கு ஐந்து. கோடு போட்ட நோட்டில் நீ எழுதிய ‘ஆக்ஷன்’ கதையில் எனக்கும் ஒரு கதாபாத்திரம் கொடு என்று கேட்பேன். ஒரு டீ கடை வரைந்து “இதுக்கு நீதான் ஓனர்” என்று கதைக்குள் எனக்கு கடைவைத்து கொடுத்தாய். நம் எழுத்தின் திசைகள் வெவ்வேறு. இருவரின் களங்களும் கவிதைகளும் வேறு. நெஞ்சில் சுமக்கும் நினைவுகள் ஒன்று. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ. உன் திரைத்தமிழ் மென்மேலும் திருவிழா காணட்டும். பேரன்புடன்
உன் முதல் நண்பன் – முதல் எதிரி – முதல் ரசிகன்” – இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் இரு வாரிசுகளான மதன் கார்க்கியும், கபிலனும் தற்போது தங்களது தந்தையைப் போலவே திரைப்படங்களில் சிறப்பாகப் பாடல்வரிகள் எழுதி வருகின்றனர்.
அதேவேளையில், இருவரும் திரைப்படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கபிலன் மெய்நிகரி என்ற நாவலையும் எழுதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.