கோலாலம்பூர் – மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி செந்தமிழ்ச் செல்வி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, தனது கணவர் இறந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் அவரது மனைவியை சம்பந்தப்படுத்தியதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக அறிவித்துள்ளார்.
மிண்டாவில் (Pertubuhan Minda dan Social Prihatin Malaysia) நடைபெற்ற அச்செய்தியாளர் சந்திப்பில் பேசிய செந்தமிழ்ச் செல்வி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் தன்னால் ஏற்பட்ட கஷ்டங்களுக்கு மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஏன் இப்போது திடீரென மன்னிப்பு கேட்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆத்திரத்தில் அப்போது குற்றம்சாட்டிவிட்டதாக செந்தமிழ்ச் செல்வி பதிலளித்துள்ளார்.
“நான் அவரது (கணவர் பாலசுப்ரமணியம்) இறப்பின் போது மிகவும் கவலையில் இருந்தேன். அந்த நேரத்தில் எல்லோரும் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோரைத் தான் அதற்குக் காரணம் காட்டினர். அதனால் நானும் என்னுடைய கணவரை அவர் தான் கொலை செய்திருப்பார் என்று நம்பிவிட்டேன்.”
“அதனால் தான் இப்போது நான் கூறியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறுகின்றேன். அவர்களின் குடும்பத்திற்கு என்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று செந்தமிழ்ச் செல்வி தெரிவித்துள்ளார்.
மங்கோலியாவைச் சேர்ந்த அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் தனியார் துப்பறிவாளராகச் செயல்பட்டவர் பாலசுப்ரமணியம்.
அல்தான்துயா கொலையில் நஜிப்பின் மீது குற்றச்சாட்டு எழுந்தது தொடர்பில் இரண்டு சத்தியப் பிரமாணங்களை அவர் செய்தார். முதல் சத்தியப் பிரமாணத்தை வாபஸ் பெற்று இரண்டாவது சத்தியப் பிரமாணம் செய்தார்.
இந்நிலையில், அதன் பின்னர் இந்தியாவில் குடும்பத்தோடு தலைமறைவான பாலசுப்ரமணியம், கடந்த 2013-ம் ஆண்டு, தேர்தல் சமயத்தில் நாடு திரும்பினார்.
அதன் பின்னர், எதிர்கட்சிகளுடன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர், திடீரென மாரப்படைப்பால் காலமானார்.
நிதியுதவி கேட்டு வந்தேன்
இதனிடையே, பிரதமர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கையும் வாபஸ் பெறப்போகிறீர்களா? என்று செந்தமிழ்ச் செல்வியிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
“நான் இங்கு வந்ததற்குக் காரணம் எனது குழந்தைகளின் கல்விக்காக நிதியளிப்பதாக சத்தியம் செய்த பலர் அதைச் செய்யவில்லை. அதனால் இந்த அரசு சாரா நிறுவனத்திடம் நிதி கேட்க வந்தேன்.”
“எனக்கு நிதியுதவி செய்வதாக பிகேஆர் வாக்குறுதியளித்தது ஆனால் நான் அவர்களிடம் சென்ற போது, பாரிஷான் நேஷனல் அதை விட இன்னும் சிறப்பாக நிதியுதவி செய்யுமா? என்று கேட்டுப் பாருங்கள் என்றனர். அதனால் வேறுவழியின்றி நான் இங்கு வந்திருக்கிறேன்”
“கடந்த 2013-ல் எனது கணவர் இறந்த பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் போராடி வருகின்றேன். இப்போது நான் ஒப்புக் கொள்கிறேன் அவர் இதய நோயால் தான் மரணமடைந்தார். கொலை செய்யப்பட்டு அல்ல” இவ்வாறு செந்தமிழ்ச் செல்வி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக ‘த ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டென வெளியேறிய செந்தமிழ்ச் செல்வி
கடந்த 2013-ம் ஆண்டு, செந்தமிழ்ச் செல்வி பிரதமர் நஜிப் துன் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் உட்பட 9 பேர் மீது வழக்குத் தொடுத்தார்.
அந்த வழக்கை திரும்பப் பெறுவீர்களா? என்று செய்தியாளர்கள் மீண்டும் ஒருமுறை செந்தமிழ்ச் செல்வியிடம் கேட்க, இல்லை என்று பதிலளித்துள்ளார்.
“பாலா என்னவெல்லாம் சொன்னாரோ அதெல்லாம் உண்மை. நான் கூறியதை மட்டும் தான் இப்போது திரும்பப் பெறுகின்றேன். என்னுடைய கணவர் இறப்பிற்கு ரோஸ்மாவை காரணம் காட்டி நான் கூறியதைத் தான் இப்போது வாபஸ் பெறுகின்றேன்” என்று செந்தமிழ்ச் செல்வி கூறியுள்ளார்.
அப்படியானால், நஜிப்பும், அவரது முன்னாள் அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பஜிண்டாவும் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்ற செய்தியாளர்கள் கேட்க, ஆமாம் என்று செந்தமிழ்ச் செல்வி தலையாட்டியுள்ளார்.
பின்னர், பிரதமரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் என்ன? என்று செய்தியாளர்கள் கேட்க, எனது பிள்ளைகளின் கல்விக்காக நிதியுதவி பெற தான் என்று செந்தமிழ்ச் செல்வி பதிலளித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்கள் கேள்வி கேட்க, இல்லை இதற்கு மேல் கேள்வி கேட்காதீர்கள் என்று கூறி செந்தமிழ்ச் செல்வி வேகமாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதனிடையே, கோபம் சற்று தணிந்த பின்னர் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிகேஆர் சொன்னபடி தங்களுக்கு நிதியுதவி அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் காணொளி (கினிடிவி):-