Home Featured தமிழ் நாடு தமிழகப் பார்வை: பல்முனைப் போட்டியால் அதிமுக கோட்டையில் கொண்டாட்டம்! திமுக வட்டாரத்தில் திண்டாட்டம்!

தமிழகப் பார்வை: பல்முனைப் போட்டியால் அதிமுக கோட்டையில் கொண்டாட்டம்! திமுக வட்டாரத்தில் திண்டாட்டம்!

651
0
SHARE
Ad

jayalalitha-karunanidhi-தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற விஜயகாந்த் அறிவிப்பால் அறிவிப்பால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்புமுனையின் விளைவுகளைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், ஒரு முக்கியமான அம்சத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் தேதிதான் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்குகின்றது என்பதால், எதிர்வரும் 5 அல்லது 6 வாரங்களில் எவ்வளவோ அரசியல் மாற்றங்கள் – குறிப்பாக புதிய கூட்டணி உருவாக்கங்கள் – நிகழலாம் என்பதுதான் அது!

எனவே, இன்றைக்கு உள்ள அரசியல் நிலவரத்தை வைத்துத்தான் சில விவாதங்களை நம்மால் முன்வைக்க முடியுமே தவிர, நாளையே அரசியல் காட்சிகள்-கானங்கள் தலைகீழாக மாறலாம் என்பதையும் நாம் கருத்தில் கொண்டுதான் இயங்க வேண்டியதிருக்கின்றது.

#TamilSchoolmychoice

கடந்த 1967ஆம் ஆண்டில் ஆட்சி பீடத்தை திமுக ஏற்றதிலிருந்து, இத்தனை ஆண்டுகளில், திராவிடக் கட்சிகளில் ஆணித்தரமான (கெடு)பிடியில் மாறி மாறி இருந்து வந்துள்ள தமிழக அரசியல், தற்போது முதன் முறையாக, மற்ற சில அரசியல் சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளது.

vijayakanthஅத்தகைய ஓர் அரசியல் சக்தியாகக் கருதப்படும் விஜயகாந்தின் அறிவிப்பால், அதிமுக – திமுக என இரு பக்கக் கூட்டணியிலும் என்ன நிலைமை என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போமா?

#அதிமுக கூட்டணி – கொண்டாட்டம்!

இன்றைய நிலையில், ஜெயலலிதாவின் சாமர்த்தியமோ, அரசியல் வியூகமோ – அல்லது விஜயகாந்த், வைகோ, பாமக, பாஜக போன்ற அரசியல் கட்சிகளின் சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காத பிடிவாதப் போக்கோ –

எதுவாக இருந்தாலும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பல்முனை போட்டி என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

இதனால், அதிக இலாபம் அதிமுகவுக்குத்தான் என்பது கண்கூடு. தனது வாக்குவங்கியை அப்படியே தக்க வைத்துக் கொள்ள அபாரமான வாய்ப்பு அந்தக் கட்சிக்கு!

தனித்துப் போட்டியிட்டால், ஐம்பது அல்லது அறுபது தொகுதிகளை மற்ற கட்சிகளிடம் இழந்தாலும், தனித்து நின்றே ஆட்சி அமைக்க முடியும் நிலைமையில் இருக்கின்றது அதிமுக! தனக்கென உள்ள வாக்கு வங்கி – நடப்பு அரசாங்கம் என்ற பலம் – மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வல்லமை வாய்ந்த ஊழல் விவகாரங்கள் இல்லை – சில மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் – என்பதெல்லாம் இந்தக் கட்சிக்கு இருக்கும் சாதக பலன்கள்!

சில சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டால், மேலும் கூடுதல் பலம் கிடைக்கும் என்பதும் மற்றொரு சாதகம் என்றாலும், இப்போதைக்கு ஜி.கே.வாசனின் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி மட்டுமே, ஜெயலலிதாவுடன் இணங்கிப் போகக்கூடிய வாய்ப்புள்ள கட்சியாகப் படுகின்றது.

GK Vasanமற்ற சிறிய கட்சிகள் சாதிய அமைப்பிலான கட்சிகள் என்பதால், ஜெயலலிதா அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சேர்த்துக் கொள்வாரா அல்லது அவர்களையும் கழட்டிவிட்டு விட்டு, தெரியாத மாதிரி போய்விடுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்!

அப்படியே அவர்களைச் சேர்ப்பதால் இலாபம் அவர்களுக்குத்தானே தவிர அதிமுகவுக்குப் பெரிதாக இலாபம் இல்லை. மாறாக, அனைத்துத் தொகுதிகளிலும் தனக்கு வேண்டிய வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம், கட்சியிலும் தனது நிலைப்பாட்டை ஜெயலலிதாவால் பலப்படுத்திக் கொள்ள முடியும்!

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கால் தீரவில்லை இன்னும் கலக்கம்!

கூட்டணி என்று வரும்போது கொண்டாட்டத்தில் இருக்கும் அதிமுக வட்டாரம், மற்றொரு விஷயத்தில் இன்னும் கலக்கத்தில்தான் இருக்கின்றது.

தேர்தலுக்கு முன்னால் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் உச்சமன்றத் தீர்ப்பு வெளியாகிவிடுமோ என்ற அச்சம்தான் அது!

அம்மாவுக்கு விடுதலை என்றால், அதிமுக குடும்பத்தில் கொண்டாட்டம் இரட்டிப்பாகி விடும். ஆனால், தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால், இன்றைக்கு திமுக வட்டாரத்தில் மையமிட்டிருக்கும் திண்டாட்டக் கலக்கம், அதிமுக வட்டாரத்தில் அடுத்த கணமே குடியேறும்.

இருந்தாலும், ஜெயலலிதாவுக்கு  விடுதலை என்றால் வெற்றி வாய்ப்பு கூடுதல் என்பது ஒரு கணிப்பு. ஆனால், தண்டனை உறுதி என்றால், அதனால் அனுதாபம் கூடி, அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அதிமுக தொண்டர்கள் இன்னும் கூடுதலாக வெறித்தனத்துடன் வேலை செய்து, மீண்டும் அவர்களே ஆட்சியில் அமர்வதற்கான வாய்ப்பும் அதிகமாகவே இருக்கின்றது.

அம்மா, சிறையில் இருந்தாலும் – கொடநாட்டில் இருந்தாலும் – போயஸ் கார்டனில் இருந்தாலும் – அவரது வழிகாட்டுதலில்தான் ஆட்சி அமோகமாக நடக்கும் என்பதை அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கறிவார்கள்.

O-Panneerselvamஇருக்கவே இருக்கின்றார்கள் – ஓ.பன்னீர் செல்வம் போன்ற தலையாட்டி பொம்மைகள், அம்மாவின் ஆணையை ஏற்றுக் கொண்டு செயல்பட!

இருப்பினும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் முடிவு வெளியாகாமல் இருக்க, அல்லது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரே வழக்கின் தீர்ப்பு வெளிவரும் வண்ணம் – ஜெ. வழக்கறிஞர்கள் குழு சட்டப் போராட்டம் நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#திமுக அணியில் திண்டாட்டம்!

மு.க.ஸ்டாலின்-கருணாநிதி குடும்பத்தில் இப்போது தீவிரமான ஆலோசனைகள் நடந்து கொண்டிருப்பதாகக் கேள்வி!

இன்றைக்கு (சனிக்கிழமை மார்ச் 12) வெளிவந்த ஒரு செய்தியின்படி கூட்டணி பற்றி முடிவெடுக்க திமுக ஒரு குழுவை நியமித்துள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இது காலம் கடந்த செயலாகவே படுகின்றது. விஜயகாந்த் என்ற ஒருவருக்காக மட்டும் இத்தனை நாள் காத்திருந்து விட்டு, இன்று அவர் வரவில்லை என்றதும் கூட்டணியைத் தேடி ஓடுவதைப் பார்த்தால் திமுக எத்தகைய மோசமான நிலைமையில் – இயலாமைத்தனத்தில் – இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

பழம் நழுவி திமுக பாலில் விழும் என கலைஞர் ஏங்கிக் கொண்டிருக்க, விஜயகாந்த்துக்கு 50, 60 என தொகுதிகளை அள்ளிக் கொடுத்து அதன்மூலம் தான் முதல்வராகி விடலாம் என ஸ்டாலின் கனவு கொண்டிருக்க – அத்தனை கனவுகளுக்கும் ஏக்கங்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக ஆப்பு வைத்திருக்கின்றார் கேப்டன்!

ஏற்கனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களிடையே அவ்வளவாக தாக்கத்தையோ – ஆதரவுக் களத்தையோ ஏற்படுத்தவில்லை. சந்தர்ப்பவாதக் கூட்டணி – 2ஜி ஊழல் கூட்டணி – வழக்குகளில் இருந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள சேர்ந்த கல்யாணக் கூட்டணி – என ஏகப்பட்ட கலாய்ப்புகள் – கிண்டல்களுக்கு மத்தியில் –

E.V.K.S.ELANGOVANவிஜயகாந்தை சேர்த்துக் கொள்வதன் மூலம் நிலைமையைச் சரி செய்து கொள்ளலாம் என்ற திமுகவின் வியூகத்திற்கு விழுந்திருக்கின்றது சிவப்பு நிற தடைக்கல்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் காங்கிரசுடன் மட்டும் கூட்டணி என்பது திமுகவுக்கு பலத்த பின்னடைவுதான் – தோல்வியை நோக்கிச் செல்லும் பாதைதானே தவிர – அது வெற்றிக் கூட்டணியல்ல!

இப்போதைக்கு அவர்களுக்கிருக்கும் சில வழிகளில் ஒன்று – மக்கள் நலக் கூட்டணியை உடைப்பது! ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, மிக இறுக்கமான – திரளான மக்கள் கூட்டத்தைச் சேர்க்கின்ற கூட்டணியாக அமைந்திருக்கின்றது இந்தக் கூட்டணி.

Vaiko-makkal nalan coalition-website launchமக்கள் நலக் கூட்டணியின் இணைய மற்றும் சமூக வலைத் தளங்களின் அறிமுக விழாவில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்….

அல்லது பாமகவோடு சமரசம் செய்து கொண்டு – களத்தில் இறங்கலாம். ஆனால், அங்கேயும் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் – அன்புமணி இராமதாஸ் உலவிக் கொண்டிருப்பதால், ஸ்டாலினுக்கு இடைஞ்சல். அதிலும் ஸ்டாலினை விட அறிவாளியாக, மெத்தப் படித்தவராக, புத்திசாலித்தனமாகப் பேசுபவராக அன்புமணி இருப்பது ஸ்டாலினுக்கு இருக்கும் மற்றொரு முட்டுக்கட்டை.

காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றவர் என்பதால், ஜி.கே.வாசனும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் வந்து சேர மாட்டார்.

சீமான் கூட நாம் தமிழர் கட்சி மூலம் தனி ஆவர்த்தனம் வாசிக்க கிளம்பி விட்டார். அத்தனை 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து விட்டு, “மக்கள் நலக் கூட்டணியைவிட அதிகமாக வாக்குகள் வாங்கிக் காட்டுகின்றேன். இல்லாவிட்டால் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே வந்து சேர்ந்து விடுகின்றேன்” என்று சவால் விட்டிருக்கின்றார் சீமான்.

இவற்றுக்கு நடுவே, அவ்வப்போது கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி விடும் வார்த்தை அம்புகளுக்கு மறுப்பு விடுப்பதும் – அவர் எனது மகன்தான், ஆனால் கட்சியில் இல்லை – என மறு உறுதிப்படுத்துவதும் கருணாநிதிக்கு இருக்கின்ற மற்றொரு முக்கிய வேலை.

எனவே, அடுத்த என்ன செய்வது – எந்தப் பக்கம் போவது – எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றது திமுக வட்டாரம்.

Stalin-Karunanithi-namakku mame completionஇத்தனை காலம் – விஜயகாந்துக்காக காத்திருந்து தனது சுயகௌரவத்தை ஓரளவுக்கு இழந்து விட்ட திமுக – இனியும் அவருக்காக வியூகங்களை மாற்றிக்கொண்டோ, கதவைத் திறந்து வைத்துக் கொண்டோ, பழம் கனியும் என சினிமா வசனம் பேசிக் கொண்டோ இருக்க முடியாது.

தன்னால் வெளிவரமுடியாத ஒரு சுழலில் – ஒரு பின்னலில் திமுக சிக்கிக் கொண்டு முக்கல் முனகலுடன் திணறப் போகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அதே வேளையில் கருணாநிதியின் இராஜதந்திரத்தையோ – அந்தக் கட்சியின் அசுர பலத்தையோ குறைத்தும் மதிப்பிட்டு விட முடியாது.

அடுத்த சில வாரங்களில் அதிரடியான – வாக்காளர்களின் மனங்களை மாற்றும் வண்ணம் சில அதிரடி வியூகங்களை வகுத்துச் செயல்படுத்த கருணாநிதியின் மூளை மிகத் தீவிரமாக சிந்திக்கும்.

அவ்வாறு செய்ய முடியாவிட்டால், தன் வாழ்நாளை நிறைவு செய்வதற்கு முன்பாக மீண்டும் ஒரு முறை தமிழக முதல்வராகவேண்டும் என்ற கருணாநிதியின் கனவும் –

அவருக்குப் பின் அடுத்தவாரிசாக முடிசூட்டிக் கொள்ளலாம் எனக் காத்திருக்கும் ஸ்டாலினின் கனவும் –

நிறைவேறாமல் போகக் கூடிய சோகத்தை எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்குக் கொண்டு வரும்!

-இரா.முத்தரசன்