வாஷிங்டன் – பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. அந்த கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் எடுத்த புகைப்படத்தை அனுப்பி வருகிறது.
ஒவ்வொரு முறையும் நாசா வெளியிடும் செவ்வாய் கிரகம் குறித்த புகைப்படங்களில் ஏதாவது ஒரு உருவம் இருப்பதாக அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து ஆய்வு நடத்திவரும் இணையதளங்கள் கூறி வந்தன.
செயல் இழந்த சிறிய அளவு விண்கலம், விண்வெளி நண்டு, புத்தர் சிலை, துருவக்கரடி இப்படி பலதரப்பட்ட உருவங்களை கூறி வந்தனர்.
தற்போது பண்டைய எகிப்திய நினைவுச் சின்னங்கள் செவ்வாய் கிரகத்திலும் உள்ளதாக வேற்றுகிரக ஆர்வலர்கள் ஆதாரத்துடன் கூறி வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை ஆய்வுச் எய்த ஜோ ஒயிட் என்ற வானியலாளர் செவ்வாய் கிரகத்தில் பண்டைய கிரேக்க நினைவுச் சின்னங்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் பூமியில் உள்ளது போன்றே செவ்வாய் கிரகத்திலும் ஸ்பின்ஸ் சிற்பம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, நாசா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்தபோது ஒரு புகைப்படத்தில் மனித தலை வடிவத்தில் சிற்பம் இருப்பதை கண்டேன்.
இது ஸ்பின்ஸ் பிரமீடு சிற்பத்தை போன்ற ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நாசா வெளியிட்ட புகைப்படத்தை நான் சோதித்து பார்த்தபோது மலைத்து போய்விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.