கூச்சிங் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புதிதாக இபான் பெண் ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று வேடிக்கையாகக் கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட சரவாக் முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் சாத்தேம், தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
“வேடிக்கையாக நான் கூறியதைக் கேட்டு பிரதமர் உட்பட அனைவரும் சிரித்தனர். காரணம் அது நகைச்சுவையாகக் கூறியது என்று தெரியும். ஆனால் அதை சில தரப்பினர் விரும்பவில்லை. அதனால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அட்னான் இன்று செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சரவாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் (Inclusive Malaysia, A Digital Nation) நஜிப் கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய சரவாக் முதல்வர் அட்னான், “சரவாக்கிற்கு அடிக்கடி வருகை புரியும் பிரதமருக்கு நன்றி. ஒரே ஒரு குறை தான். அவரால் மலாய், ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடிகின்றது.
ஆனால் இபான் மொழியில் அவரால் இயலவில்லை. பிரதமர் ஒருவேளை புதிய மனைவியைத் தேடுவதாக இருந்தால், இபான் பெண்ணைத் தேர்ந்தெடுங்கள் என்று நான் ஆலோசனை கூறுகின்றேன். சும்மா ஒரு வேடிக்கையாகக் கூறுகின்றேன்.” என்று தெரிவித்தார்.
அவ்வாறு அவர் கூறியதை பலர் அதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டாலும் கூட, சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தான் கூறிய கருத்தை அட்னான் திரும்பப் பெறுவதோடு, அதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து அட்னான் இன்று தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.