மும்பை – 20 வருடங்களாக தலைமறைவாக இருந்த தாவூத் இப்ராகிம் உதவியாளர் நதீம் குலாம் ரசூல் மிஸ்த்ரி கைது செய்யப்பட்டுள்ளார். 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
அவரை கைது செய்வதற்கு ‘ரெட் கார்னர் நோட்டீசும்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள தாவூத் இப்ராகிம், இருப்பிடம் குறித்த பல்வேறு முக்கிய ஆவணங்களை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா அளித்துள்ளது.
இவ்விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு அழுத்தத்தை கொடுத்தாலும், தாவூத் இப்ராகிம் எங்களுடைய நாட்டில் இல்லை என்று தொடர்ந்து பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
இந்நிலையில் 1990 துப்பாக்கி சூடு வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான நதீம் குலாம் ரசூல் மிஸ்த்ரியை மும்பை குற்றப்பிரிவு போலீசார் குஜராத்தில் கைது செய்துள்ளனர். நதீம் குலாம் ரசூல் மிஸ்த்ரி தாவூத் இப்ராகிம்மின் நெருங்கிய உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
1990-ஆம் ஆண்டு மும்பையின் பாந்ரா பகுதியில் காஜி என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில் தாவூத் இப்ராகிமிற்கு பதிலாக மங்கேஷ் பவார், பிலு கான் மற்றும் மிஸ்திரி ஆகியோர் துப்பாக்கி சூட்டை நடத்தினர் என்பது தெரியவந்தது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று பேருக்கும் ஜாமின் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த மிஸ்திரி 20 ஆண்டுகளுக்கு முன்னதாக மும்பையை விட்டு தப்பி ஓடிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் மாநிலம் வதோராவில் குடும்பத்துடன் மிஸ்திரி வசிப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர்.
எஸ்டேட் ஏஜெண்டாக மிஸ்திரி பணியாற்றி வந்து உள்ளார். அவரை காவலில் எடுத்து போலீஸ் விசாரித்து உள்ளது. விசாரணையில் ஜாமீனில் வெளியே வந்து தப்பி ஓடிய மிஸ்திரி என்பது தெரியவந்தது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறை காவலுக்கு அனுப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாவூத் இப்ராகிம் குழுவில் இருந்து தனியாக போதைபொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மங்கேஷ் பவார் மற்றும் பிலு கான் கொல்லப்பட்டு விட்டனர். பிலு ஆப்பிரிக்காவிலும் மங்கேஷ் மலேசியாவிலும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.