நாக்பூர் – 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 10 சுற்றின் முதல் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள், இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘குரூப் 1’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து , தென்ஆப்பிரிக்கா, மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும், ‘குரூப் 2’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் பங்களாதேஷ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் நாக்பூரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களில் 10–இல் வெற்றி பெற்று இந்திய அணி முத்திரை பதித்துள்ளது.
சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மலேசிய நேரப்படி இரவு 9.50 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.