Home Featured தமிழ் நாடு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது தவறு – கர்நாடகா அரசு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது தவறு – கர்நாடகா அரசு!

661
0
SHARE
Ad

jaya_aacharyaபெங்களூர் – ”சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேரை விடுதலை செய்து, கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு தவறானது,” என, கர்நாடகா அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேரை விடுதலை செய்து, கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா மாநில அரசும், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த மேல் முறையீட்டு மனுக்களை, நீதிபதி பினாகி சந்திர கோஸ், நீதிபதி அமிதவா ராய் அடங்கிய அமர்வு விசாரித்தது. நேற்று, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கர்நாடகா அரசு தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆஜராகி வாதிட்டார்.

#TamilSchoolmychoice

அப்போது அவர், உயர்நீதிமன்றம் கணக்கிட்ட விவரங்களை, பட்டியலிட்டு வாதிட்டதாவது: வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்துக்கள் குறித்து, கர்நாடகா உயர்நீதிமன்றம் கணக்கிட்டதில் தவறுகள் உள்ளன.

உயர்நீதிமன்றத்தின் முடிவுகள் அத்தனையையும், அப்படியே ஏற்றுக் கொண்டால், வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களின் மதிப்பு, 14.39 கோடி ரூபாயாக, 41 சதவீதம் என்ற அளவில் இருக்குமே தவிர, உயர்நீதிமன்றம் கூறியபடி, 2.82 கோடி ரூபாயாக, 8.12 சதவீதமாக இருக்காது.

உயர்நீதிமன்றம் கணக்கிட்டதில் ஏற்பட்ட தவறுகளை திருத்தினால், ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களின் மதிப்பு, 16.32 கோடி ரூபாயாக, 76.70 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.

கட்டிடங்கள் கட்டிய வகையில் செலவானதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, 3.58 கோடி ரூபாயை ஏற்றுக் கொண்டால், பின், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு, 19.91 கோடி ரூபாயாக, 93.60 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.

‘ஜெயா பப்ளிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் கிடைத்த வர்த்தக வருமானத்தை சேர்த்தால், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துக்களின் மதிப்பு, 22.76 கோடி ரூபாயாக இருக்கும்.

சொத்துக்களைக் கணக்கிட்டதில் உள்ள தவறுகளை சரி செய்து, பரிசுப் பொருட்களை வருமானமாகக் கருதாமல் இருந்தால், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு, 35.73 கோடி ரூபாயாக இருக்கும். மொத்த வருவாய், 16.93 கோடி ரூபாயாக இருக்கும்.

சதவீதத்தின்படி பார்த்தால், வருமானத்துக்கு அதிகமாக, 211.09 சதவீதம் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக வருமே தவிர, 8.12 சதவீதமாக இருக்காது. வங்கிகளில் பெற்ற கடன் கணக்கில் எடுக்கவில்லை. மொத்தத்தில், இந்த வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேரை விடுதலை செய்தது தவறானது என வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வாதிட்டார்.

இதையடுத்து, ஜெயலலிதா உள்ளிட்டோர், 1991 – 96-ஆம் ஆண்டுகளில் வங்கிகளில் வாங்கிய கடன் விவரங்களையும், கணக்குகள் துவங்கிய விவரங்களையும் வழங்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, இன்று தள்ளிவைத்தனர்.