கோலாலம்பூர் – கெடா, ஜோகூர், கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்களில் வரும் மார்ச் 20 மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகள் பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணம் இந்த வாரத்தோடு நிறைவடையும் பள்ளி விடுமுறையை மேலும் நீடிக்க கல்வியமைப்பு முடிவு செய்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
“அளவுக்கதிகமான வெப்பத்தின் காரணமாக தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்” என்று நேற்று தனது வலைத்தளத்திலும் நஜிப் தெரிவித்துள்ளார்.
இஎல் நினோ நிகழ்வு (El Nino phenomenon) என்ற இயற்கை மாற்றம் காரணமாக மலேசியாவில் தற்போது கடும் வெயில் நிலவி வருகின்றது. இந்தக் கடும் வெயிலில் குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், வெயில் காரணமாக தலைவலி, பாத வெடிப்பு, வேகமான இதயத்துடிப்பு, உடலில் தடிப்புகள், தசை வலி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி நஜிப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த அளவுக்கதிகமான வெப்பம் ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைந்து சூடு தணியும் வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.