கோலாலம்பூர் – பிரதமர் கடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாகத் தான் அந்த இரு ஆஸ்திரேலிய செய்தியாளர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள் என்று உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறியுள்ளது மிகவும் அபத்தம் என்று அந்த செய்தியாளர்களும் ஒருவரான லிண்டான் பெசெர் தெரிவித்துள்ளார்.
“இது ஒரு சர்கஸ் போல் உள்ளது. முதலில் நான் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி பெறவில்லை என்றார்கள், பின் நான் ஆக்ரோஷமாக நடந்து கொண்டேன் என்றார்கள், பின் நான் பாதுகாப்பை மீறினேன் என்றார்கள். இப்போது இப்படிச் சொல்கிறார்கள்” என்று ஹம்சா சனுடினின் கருத்தைச் சுட்டிக்காட்டி லிண்டன் பெசெர் இன்று தனது டுவிட்டர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அந்தச் செய்தியாளர்கள் பணியாற்றிய ஆஸ்திரேலியன் புரோட்கேஸ்டிங் நிறுவனத்தின் தலைமை நிகழ்ச்சி தயாரிப்பாளரான சாலி நெய்பர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், எங்களது ‘போர் கார்னர்ஸ்’ செய்தியாளர்கள் நாடு கடத்தப்பட்டதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அவர்கள் நாடு கடத்தப்படவில்லை. மாறாக அவர்களுக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் இல்லாததால் விடுவிடுக்கப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியவுடன் ஏபிசி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள லிண்டன் பெசெர், “நாங்கள் மலேசிய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டதாக பரவலாக செய்திகள் வெளியாகின்றன. நாங்கள் குடிநுழைவு அதிகாரிகளின் பாதுகாப்போடு வெளியேற்றப்பட்டோம் என்பது உண்மை தான்”
“விமானத்தில் எங்கள் இருக்கைக்கு செல்லும் வரை காவல்துறை அதிகாரிகள் எங்களைப் புகைப்படம் எடுத்தார்கள். ஆனால் நாங்கள் நாடு கடத்தப்படுகிறோம் என்று எங்களிடம் யாரும் கூறவில்லை. எங்களது கடப்பிதழில் கூட நாடு கடத்தப்பட்டோம் என்பதற்கான ஆதாரம் இல்லை. நாடு பட்டதற்கான ஒரு துண்டுச்சீட்டு ஆவணம் கூட எங்களுக்கு தரப்படவில்லை” என்று லிண்டன் பெசெர் தெரிவித்துள்ளார்.
இதனிடயே, இந்த விவகாரம் குறித்து நேற்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியுள்ள துணை உள்துறை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் மொகமட், “அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள் என்றால், தவறு செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் மீண்டும் சுற்றுப்பயணியாக வந்தால் பிரச்சனையில்லை. ஆனால் அவர்கள் மீண்டும் வந்து சட்டத்தை மீறுபடியாக ஏதாவது செய்தால் தான் பிரச்சனை” என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.