பேங்காக் – நேற்று வெடிகுண்டு மிரட்டல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து பேங்காக் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பயணிகளும், பணியாளர்களும் விமானத்தின் அவசர வாயில்களின் வழி உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதுவரை அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதோடு, வெடிகுண்டுகளும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விமான நிலையத்தில் தனித்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த விமானத்தை தாய்லாந்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றார்கள்.
ஏர் இந்தியா 332 வழித் தடத்தைக் கொண்ட அந்த விமானம் புதுடில்லியில் இருந்து பேங்காக் சென்று கொண்டிருந்தபோது, இந்தியாவிலுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அலுவலகத்திற்கு, வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் வழி, அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஏர் இந்தியாவின் போயிங் 787 டிரீம்லைனர் விமானத்தின் மாதிரி ஒன்று….
அதைத் தொடர்ந்து அந்த போயிங் 787 டிரீம்லைனர் ரக விமானம், பேங்காக்கின் சுவர்ணபூமி அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் பேங்காக் சென்றடைய ஏறத்தாழ ஒரு மணி நேரம் இருக்கும் போது, வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, விமானத்தை அவசரமாக, முக்கியத்துவம் கொடுத்து முதலில் தரையிறக்க விமான நிலையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான, தனிப் பகுதியில் தரையிறக்கப்பட்டு, நிறுத்தப்பட்ட அந்த விமானத்திலிருந்து 231 பயணிகளும், 10 பணியாளர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் அவசர வாயில்கள் திறக்கப்பட்டு, பலூன் படுக்கை போன்ற சறுக்கிச் செல்லும் மெத்தைகளின் (inflatable slides) வழியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாகப் பரிசோதனை நடத்தியதில் வெடிகுண்டு தொடர்பான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இன்று அந்த விமானம் தனது பயணத்தைத் திட்டமிட்டபடி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.