கொல்கத்தா/மும்பை – நேற்று டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் பாதி ஆட்டத்தில், பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிந்தபோது, 201 ஓட்டங்கள் எடுத்து, 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பாகிஸ்தான் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் களமிறங்கிய வங்காள தேசம் 20 ஓவர்கள் முடிவடைந்தபோது, 6 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் 55 ஓட்டங்கள் (ரன்கள்) வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்தை வெற்றி கொண்டது
மும்பையில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து இருநாடுகளும் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் ஆட்டக்காரர் கிரிஸ் கேய்ல் அபாரமாக விளையாடி, 47 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
முதல் பாதி ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்தது இங்கிலாந்து.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் 18.1 ஓவர்களிலேயே 183 ஓட்டங்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.