வாஷிங்டன் – அமெரிக்காவின் உச்ச மன்ற நீதிபதியாக இருந்த அந்தோணின் ஸ்காலியா காலமானதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக மெரிக் கார்லண்ட் (படம்) என்பவரை அமெரிக்க அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்க அரசியல் அமைப்பில் உச்சமன்றம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த அங்கமாகும். உச்சமன்றத்தின் நீதிபதியைப் பரிந்துரைக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்குத்தான் உண்டு.
அவர் பரிந்துரை செய்தாலும், அமெரிக்காவின் மற்ற சட்டரீதியான அமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டவரின் பின்னணிகள், தகுதிகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து, இறுதியாக அமெரிக்க நாடாளுமன்றத்தால் அந்த நியமனம் அங்கீகரிக்கப்படும்.
இந்தியர் ஸ்ரீகாந்த் சீனிவாசனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை
இந்த முறை இந்தியாவில் பிறந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் (படம்) என்பவருக்கு அடுத்த உச்சமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பு கிடைக்கும் என இறுதி நிமிடங்கள் வரை ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டன.
வழக்கமாக அனைத்துலக தகவல் ஊடகங்களின் கவனத்தை அவ்வளவாக ஈர்க்காத அமெரிக்க உச்ச நீதிமன்ற நியமனம் இந்த முறை இந்தியர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்களின் காரணமாக, பல நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் தலைப்புச் செய்தியாக உருவெடுத்தது.
ஆனாலும், ஒபாமா, மெரிக் கார்லண்ட் என்பவரைப் பரிந்துரை செய்து “அமெரிக்காவின் மிகக் கூர்மையான சட்ட மூளைகளைக் கொண்ட ஒருவர்” என அவரைப் பற்றி வர்ணித்துள்ளார்.
கார்லண்ட் தற்போது வாஷிங்டனிலுள்ள அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருக்கின்றார். அவர் மிகவும் நடுநிலையானவர் என்றும், ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என இருதரப்பு பிரதிதிகளையும் தீவிரமாகக் கலந்து ஆலோசித்த பின்னரே ஒபாமா தனது பரிந்துரையைச் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கார்லண்டை வரவேற்கும் ஒபாமா…
“அமெரிக்காவின் கூர்மையான சட்ட மூளைகளைக் கொண்டவர்களில் ஒருவரான மெரிக், தனது பணியில் பண்பு, பணிவு, நேர்மை, நடுநிலைமை, திறமை என அனைத்து குணாதிசயங்களையும் கொண்டவர்” என ஒபாமா, கார்லண்ட் குறித்து புகழ்ந்துரைத்துள்ளார்.
குடியரசுக் கட்சி ஒபாமா பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமா?
இதற்கிடையில், எதிர்வரும் நவம்பரில் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால், தனது பதவிக் காலத்தின் இறுதி மாதங்களில் இருக்கும் ஒபாமாவின் அதிகாரத்தின் கீழ் உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தைத் தடுக்க குடியரசுக் கட்சி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிபர் தேர்தலுக்குப் பின்னர் புதிய அதிபர்தான் உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டுமென குடியரசுக் கட்சியின் சில தரப்பினர் விரும்புகின்றனர்.
மெரிக் கார்லண்ட் – பின்னணி என்ன?
63 வயதான கார்லண்ட், அமெரிக்காவின் முன்னணி பல்கலைக் கழகமான ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் மிகச் சிறந்த முறையில் சட்டக் கல்வியில் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் வழக்கறிஞராக தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய பின்னர் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின் உதவியாளர்களில் ஒருவராக அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றத் தொடங்கினார்.
தனது நியமனம் குறித்து கருத்துரைத்துள்ள கார்லண்ட் “எனது திருமணத்திற்குப் பின்னர் எனக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய கௌரவம் இது. சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் என எனது பெற்றோர்கள் எனக்குள் விதைத்த பொறுப்புணர்வை நான் தொடர்வேன்” என தழுதழுத்த குரலில் கூறியுள்ளார்.
-இரா.முத்தரசன்