சென்னை – உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறி ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து, எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீஸ் குதிரையின் பின்பகுதி கால் உடைந்தது.
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷி கம்பால் தாக்கியதில் குதிரையின் கால் உடைந்ததாக காணொளிக் காட்சிகள் வெளியாகியது. குதிரையை தாக்கியதாக கணேஷ் ஜோஷி சட்டமன்ற உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கு விலங்கு நல வாரியம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. விலங்குகள் மீது அதிகம் பாசம் வைத்துள்ள நடிகை திரிஷா குதிரை மீது தாக்குதல் நடத்திய சட்டமன்ற உறுப்பினருக்கு டுவிட்டர் இணையத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் நடிகை திரிஷா கூறியிருப்பதாவது: குதிரையின் காலை உடைத்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரை நரகத்தில் எரிய வேண்டும். காயம் அடைந்த குதிரை விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இது போன்ற செயல் வெட்கமானது என்று கூறி உள்ளார்.
குதிரையின் காலை உடைத்ததாக” என் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் என்னுடைய காலை இழக்க தயார்,” என்று பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.