கேரளா – பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவரது உடலில் ‘மெத்தனால்’ என்ற போதை அளிக்கும் ரசாயனம் அதிகளவில் இருந்தது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் இதுபற்றி போலீசுக்கு மருத்துவ நிர்வாகம் தகவல் கொடுத்தது.
இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கலாபவன்மணியின் உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்காக காக்கநாட்டில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கலாபவன்மணியின் மரணத்திற்கு அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதுதான் காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே சமயம் ரசாயன பரிசோதனை முடிவு கிடைத்த பிறகு தான் கலாபவன்மணியின் மரணத்திற்கான காரணம் துல்லியமாக தெரிய வரும்.
கலாபவன்மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் ஏற்கனவே கலாபவன்மணியின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது சாவில் உள்ள மர்மங்களை போலீசார் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ராமகிருஷ்ணன் மீண்டும் இதே புகாரை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கலாபவன்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்ததும் பதறிக்கொண்டு சென்றேன். அப்போது மருத்துவர்கள் கலாபவன்மணி உடலில் அளவுக்கு அதிகமாக ‘மெத்தனால்’ கலந்திருப்பதாக தெரிவித்தனர்.
கலாபவன்மணியின் பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் நடிகர்கள் ஜாபர், ஷாபு உள்பட 6 பேர் கலந்துகொண்டு உள்ளனர். அவர்களில் கலாபவன் மணியை தவிர மற்ற யாருடைய உடலிலும் ‘மெத்தனால்’ கலக்கவில்லை. ஆனால் கலாபவன்மணியின் உடலில் மட்டும் ‘மெத்தனால்’ எப்படி கலந்தது? இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
போலீசார் என்னிடம் விசாரித்தபோது இந்த சந்தேகத்தை அவர்களிடம் தெரிவித்திருந்தேன். மேலும் கலாபவன்மணியின் பண்ணை வீட்டில் போலீசார் விசாரணை நடத்த சென்ற போது அங்கு மது விருந்து நடந்ததற்கான தடயங்கள் அழிக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த தடயங்களை அழிக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும் கலாபவன்மணி பண்ணை வீட்டில் மது அருந்தியபோது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் அவரது உதவியாளர்கள் 3 பேர் ஒரு செவிலியரை அழைத்து வந்து கலாபவன்மணிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது கலாபவன் மணிக்கு அந்த செவிலியரை ஊசி போட்டுள்ளார்.
இதனால் கலாபவன்மணிக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவரை காரில் ஏற்றிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். எனவே அந்த உதவியாளர்களிடம் போலீசார் விசாரித்தால் கலாபவன் மணியின் சாவில் உள்ள மர்மங்கள் வெளியாகும்.
மது விருந்தில் பங்கேற்ற நடிகர் ஜாபர் தான் ஒரு பீர் மட்டும் குடித்ததாக கூறி உள்ளார். நடிகர் ஷாபு தான் மது குடிக்கவில்லை என்று கூறி உள்ளார். ஆனால் ஷாபு மது குடித்துவிட்டு கார் ஓட்டமுடியாத அளவுக்கு போதையில் இருந்துள்ளார்.
இதனால் தனது கார் ஓட்டுனரை அழைத்து நடிகர் ஷாபுவை திருவனந்தபுரத்தில் விட்டு வரும்படி கலாபவன் மணி கூறியுள்ளார். எனவே இதிலும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது என அவர் கூறினார்.
இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். நடிகர் கலாபவன்மணியின் உதவியாளர்கள் அருண், பிஜின், முருகன் ஆகியோரை அதிரடியாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலாபவன்மணியின் பண்ணை வீட்டில் மது விருந்தின் போது நடந்தது என்ன? மது விருந்தின் தடயங்கள் அழிக்கப்பட்டது ஏன்? கலாபவன் மணியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரை மருத்துவமனையில் அனுமதித்தது ஏன்? என்பது உள்பட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் நடிகர்கள் ஜாபர், ஷாபு ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் காக்கநாடு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்ட கலாபவன் மணியின் உடல் உறுப்புகளின் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த பரிசோதனை முடிவில் கலாபவன்மணியின் மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.