புதுடெல்லி – தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். 234 இடங்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு மே மாதம் 16–ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கையில் முக்கிய அரசியல் கட்சிகள் முனைப்பாக ஈடுபட்டுள்ளன. பாரதீய ஜனதா கட்சியைப் பொருத்தமட்டில் அது தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
இது தொடர்பாக அந்த கட்சியின் தமிழக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தே.மு.தி.க. தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் விஜயகாந்த் அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழ்நாட்டில் நாங்கள் தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டணி அமைக்க மாட்டோம்.
நாங்கள் தனித்து போட்டியிடுவோம். இந்த தேர்தலில் வியக்கத்தக்க அளவில் வெற்றி பெறுவோம். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவது குறித்து எதுவும் தெரிவிக்க முடியாது. அது அவர்கள் விருப்பம்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு என கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டிருக்கிறது. வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.
19, 20–ஆம் தேதிகளில் (இன்றும், நாளையும்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது. அப்போது வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆராயப்படும். அடுத்த வாரம் நான் சென்னைக்கு செல்கிறபோது, எல்லாம் இறுதி செய்யப்பட்டு விடும் என அவர் கூறினார்.