பிரசல்ஸ் – பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் விமான நிலையம், சுரங்க ரெயில் நிலையம் ஆகியவற்றில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் 2 பேர் சகோதரர்கள் என்பது நேற்று விசாரணையில் தெரியவந்தது.
இருவரில் பிராஹிம் என்பவர் விமான நிலையத்திலும், காலிட் என்பவர் சுரங்க ரெயில் நிலையத்திலும் மனித வெடிகுண்டுகளாக மாறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இவர்களில் பிராஹிம் தனது கணினியில் குறிப்பு போன்ற ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அதில் அவர், ‘‘நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா பக்கமும் என்னை வேட்டையாடுகின்றனர். இனி பாதுகாப்பு இல்லை. சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைபட விருப்பம் இல்லை’’ என கூறியுள்ளார்.
‘அவர்’ என்று பிராஹிம் குறிப்பிட்டிருப்பது பாரீஸ் தாக்குதல் வழக்கில் கைதாகியுள்ள தீவிரவாதி சலா அப்தே சிலாமை குறிப்பதாக நம்பப்படுகிறது.
இந்தக் கணிணி, பிரசல்ஸ் நகரில் ஒரு குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில்தான் வெடிக்காத ஒரு குண்டையும் போலீசார் கண்டெடுத்தனர்.