சென்னை – தமிழகத்தில் 9 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. சென்னை தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் 104 டிகிரியை தாண்டியுள்ளது. வேலூரில் அதிகபட்சமாக நேற்று 106 டிகிரி வரை கொளுத்தியுள்ளது வெயில்.
தமிழ்நாட்டில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு சூரியன் மறைந்த பிறகும் பகலில் அடித்த வெயிலின் தாக்கம் காரணமாக அனலாக உள்ளதால் வீட்டில் இருப்பவர்கள் கூட புழுக்கத்தில் தவிக்கும் நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை அதிகபட்சமாக திருப்பத்தூரில் 106 டிகிரி வரை வெப்பம் நிலவியது. அடுத்து வரும் நாள்களுக்கு வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை பதிவான வெயில் நிலவரம் திருப்பத்தூர் – 104, சேலம் – 102, மதுரை – 102, கரூர் – 102, திருச்சி – 102, பாளையங்கோட்டை – 102, தருமபுரி – 102, வேலூர் – 100, கோவை – 100 டிகிரியாகும்.