கோலாலம்பூர் – இன்று பிற்பகல் மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறுகின்றது. இன்றைய கூட்டத்தில் மஇகாவின் முன்னாள் பொருளாளரான டத்தோ இரமணன் கட்சியிலிருந்து தேசியத் தலைவரால் நீக்கப்பட்டதற்கு எதிராக செய்திருந்த மேல் முறையீடு விசாரிக்கப்படும் எனத் தெரிகின்றது.
இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்தில் நேரடியாக விளக்கம் தர டத்தோ இரமணனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதாகவும், இன்றைய மேல்முறையீடுதான் அவர் மீண்டும் கட்சிக்குத் திரும்ப அவருக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு எனவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தனது சார்பான தற்காப்பு வாதங்களையும், மேல்முறையீட்டுக்கான காரணங்களையும் இன்றைய மத்திய செயலவைக் கூட்டத்தின் முன் ஆஜராகி இரமணன் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார், கட்சி நலன்களுக்கு எதிராக நடந்து கொண்டார் என்பது போன்ற காரணங்களுக்காக, இரமணனை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கினார்.
தேசியத் தலைவர் எடுக்கும் அத்தகைய முடிவுகளிலிருந்து, மத்திய செயலவைக்கு மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்ட உறுப்பினருக்கு மஇகாவின் அரசியல் அமைப்பு வாய்ப்பு வழங்குகின்றது.
அந்த அடிப்படையில்தான், இரமணனும் மேல் முறையீடு செய்ய, அந்த மேல்முறைடு மீது மஇகா மத்திய செயலவை இன்று விசாரணை நடத்தவிருக்கின்றது.