Home Featured தமிழ் நாடு தமிழகப் பார்வை: அழகிரி வரவால் திமுகவுக்கு மேலும் சறுக்கல்தான்!

தமிழகப் பார்வை: அழகிரி வரவால் திமுகவுக்கு மேலும் சறுக்கல்தான்!

838
0
SHARE
Ad

alagiri stalinஇனியும் ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்பது போன்ற பராசக்தி காலத்து வசனங்கள் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. கரங்களில் சிக்காமல் நழுவி விட்ட – அதுவும் ஸ்டாலினுக்கு எதிராக தினவெடுத்த தோள்களோடு மார்தட்டிக் கொண்டிருக்கும் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மக்கள் நலக் கூட்டணிக்குப் போய்விட்ட – விஜயகாந்த் என்ற அஸ்திரத்துக்கு மாற்றாக என்ன – என்று யோசித்த கலைஞருக்கு கிடைத்த ஆயுதம்தான் ‘திரும்பிவா அழகிரி’ என்ற குடும்ப நாடகக் காட்சி.

விஜயகாந்தின் முடிவுக்குப் பின்னர் அதிமுகவுக்கும்-விஜயகாந்த் அணிக்கும் இடையில்தான் போட்டி என தகவல்கள் ஊடகங்கள் உசுப்பேற்றிக் கொண்டிருக்க, வேறு வழி தெரியாமல் விழி பிதுங்கி திமுகவினர் நின்ற வேளையில் ஆனானப்பட்ட கலைஞருக்கு வேறு வழி தெரியாமல்,  உதித்த யோசனைதான் அழகிரியைத் திரும்ப அழைப்பது!

alagiri_1340597fஆனால், அழகிரியின் வரவால் திமுகவின் செல்வாக்கு கூடுமா? குறையுமா?

#TamilSchoolmychoice

மீண்டும் ஸ்டாலின்-அழகிரி அணிகள் முளைக்குமா?

உண்மையிலேயே அழகிரியால் திமுகவின் வாக்கு வங்கியை உயர்த்த முடியுமா?

-என வரிசையாக-அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

இதுவரை வெளிவந்த தகவல்களின்படி, கருணாநிதியின் பாசத்திற்குரிய புதல்வி செல்வியின் பெருமுயற்சியால்தான் அழகிரி இணைப்பு நடந்திருக்கின்றது என்பதோடு, அழகிரிக்கு எந்தப் பதவியும் ஒதுக்கப்படாமல், மீண்டும் கட்சிக்குத் திரும்பி பிரச்சாரம் செய்வார் என்பது உறுதிப்படாத தகவல்.

இதற்குக் காரணம், ஸ்டாலினின் நெருக்குதல்தான் என்கிறார்கள்! வேண்டுமானால் கட்சிக்குள் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால், பதவி எதுவும் கொடுக்க வேண்டாம் என்பதுதான் ஸ்டாலின் கொடுத்த நெருக்குதல் என்கின்றன திமுக வட்டாரங்கள்.

selvi-daughter-of-karunanidhi-செல்வியின் (படம்) வற்புறுத்தலால், இரண்டு வருடங்களாகப் பார்க்காத தந்தையைப் பார்த்த அழகிரி  “கட்சிக்காக பிரச்சாரம் செய்கின்றேன், ஆனால் பதவி எதுவும் வேண்டாம்” என தெரிவித்து விட்டதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“எவ்வளவோ கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தவர் தந்தை. நீங்களெல்லாம் சொகுசாக மேலே வந்து விட்டீர்கள். தள்ளாத வயதில் தந்தை – தள்ளாடிக் கொண்டிருக்கும் கட்சி. இந்நிலையில் நீங்கள் முரண்பட்டு நிற்பது நியாயமா?” என சமாதானத் தூது விடுத்து இரு சகோதரர்களையும் இணைத்தார் செல்வி என்கின்றன தகவல் ஊடகங்கள்.

அழகிரியால் ஆதரவு கூடுமா? குறையுமா?

எல்லாம் சரி! இதனால் திமுக மேலும் முறுக்கேறுமா அல்லது சறுக்குமா?

கடந்த 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் அமர்ந்திருந்த திமுக தோல்வி கண்டதுக்கான காரண முகங்களுள் முக்கியமான ஒன்று அழகிரிதான் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

குறிப்பாக மதுரையிலும், தென் மாவட்டங்களிலும் அழகிரி திமுகவுக்கு  திரும்புவதால் கூடுதலாக சில தொகுதிகளில் வென்று – அப்படியே திமுக மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்ந்து விட்டால் – என்பதை நினைக்கும்போதே பலருக்கு இந்நேரம் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும்.

stalinஎனவே, அழகிரியின் போக்கு – மற்றும் அவரால் அல்லது அவரது அணியினர் எனக் கூறிக் கொண்டவர்களால் நடைபெற்ற சில அசம்பாவிதங்கள் காரணமாக, தென் மாவட்டங்களில் திமுகவுக்கு வாக்குகள் இன்னும் கிடைக்க வாய்ப்பில்லை. மாறாக, அழகிரியின் வரவால் திமுக எதிர்ப்பு வாக்குகள் இன்னும் வலுவுடன், தெளிவாக திமுகவுக்கு எதிராக விழும் என்பதுதான் நிதர்சனம்.

தென் மாவட்டங்களில் திமுகவுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் கூட அழகிரியின் வரவால் தங்களின் முடிவை இனி மாற்றிக் கொள்ளக்கூடும்.

திமுகவில் மீண்டும் பிளவுகள்-பிணக்குகள் அதிகரிக்கும்!

திமுகவினரே அழகிரி-கருணாநிதி சந்திப்பால் இன்னும் குழப்பத்தில் இருக்கின்றனர் என்பதைத்தான் காட்டுகின்றன, யாருமே அழகிரியின் வரவு குறித்து கருத்து சொல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது!

பின்வாசல் வழியாக கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியைச் சந்திக்க அழகிரி நுழைந்தார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த அதே நாளில், திமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளர் டிகேஎஸ்.இளங்கோவனைப் பார்த்துப் பத்திரிக்கையாளர்கள் அது குறித்து கேட்டபோது, “எங்களுக்கு எதுவும் தெரியாது. தந்தையாரைச் சந்திக்க அழகிரி வந்தார் எனத் தகவல் ஊடகங்கள் தெரிவித்ததுதான் எங்களுக்கும் தெரியும்” என்று கூறினார்.

vijayakanth_jpg_1590953gஸ்டாலினோ இறுகிய முகத்துடன் “அவர் தனது பெற்றோரைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். இதில் அரசியல் எதுவும் இல்லை. நீங்கள் பெரிதுபடுத்த வேண்டாம்” என பத்திரிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், கடைக்கோடி திமுக தொண்டனுக்கும்கூடத் தெரியும் – விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததற்கு மாற்றாக ஓர் அரசியல் அதிரடி முடிவை எடுக்கும் இக்கட்டான நிலையில் இருந்த கருணாநிதிக்குக் கிடைத்த ஒரே ஆயுதம் – அழகிரியைத் திரும்ப அழைப்பதுதான் என்று!

காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்டாலின்தான் இனி, அழகிரி கட்சிக்குத் திரும்ப வாய்ப்பே இல்லை என்பது போன்ற தோற்றங்கள் உருவாக்கப்பட்டன. அதனால், அழகிரி ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டு, கட்சியின் முக்கிய நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கப்பட்டனர்.

அதற்கேற்ப, கருணாநிதியும் நடந்து கொண்டு வந்தார். அனைத்து முனைகளிலும், ஸ்டாலினே முன்னணியில் நிறுத்தப்பட்டார். அழகிரி வீட்டுக்கு வந்த போதெல்லாம் தாயாரை மட்டும் பார்த்து விட்டுப் போவதும், வீட்டில் இருந்தாலும் அழகிரியைப் பார்க்க கருணாநிதி மறுத்ததும் – கடந்த இரண்டு ஆண்டுகளில் – அவ்வப்போது அரங்கேறிய குடும்பக் காட்சிகள்.

karunaஇந்த சூழ்நிலையில்தான் மீண்டும் கட்சிக்குள் அழகிரி என்றதும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர் திமுகவினர். மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா என அவர்கள் கேட்பதும் காதில் விழாமல் இல்லை!

அழகிரியின் மறு-வரவுக்கு அன்பழகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளார் கலைஞர். இத்தனை வயதிலும் கட்சிக்குள் கலைஞர் எடுக்கும் முடிவுகளுக்குத் தலையாட்டுவதற்காகவே – அதிலும் கருணாநிதியின் குடும்ப அரசியல் முடிவுகளுக்கும் சேர்த்து தலையாட்டுவதற்காகவே, அன்பழகன் இருப்பதைப் பார்த்தால், அவரைப் பார்த்து வேதனைப்படுவதா – அனுதாபப்படுவதா தெரியவில்லை.

அழகிரியின் வரவால் திமுக மேலும் தன்னைத் தானே பின்னடைவு கொள்ளச் செய்துவிட்டதாகத்தான் தோன்றுகின்றது. கருணாநிதி அவருக்குப் பின் ஸ்டாலின் என தெளிவாக இருந்த திமுக குளத்துக்குள் இனி குழப்ப அலைகள்!

திமுகவில் இனி ஸ்டாலின்-அழகிரி அணி பிரிதல்கள்-மோதல்கள் மெல்ல மெல்லத் தலையெடுக்கத் தொடங்கும். அதனால், கீழ்மட்டத் தொண்டர்களிடையே பிளவுகளும், மோதல்களும்தான் உருவெடுக்கும். இவையெல்லாம் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கவே செய்யும்.

ஒரே ஒரு சாதகம் என்னவென்றால் – இனி குடும்பத்தினர் ஒன்றுபடுவார்கள். உதயநிதி ஸ்டாலினும், தயாநிதி அழகிரியும் ஒன்றிணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் இவையெல்லாம் வாக்குகளைக் கொண்டு வந்து சேர்க்குமா?

மற்றபடி திமுகவில் குடும்ப அரசியல்தான் மேலோங்கி இருக்கின்றது என்ற நிலைமையை மேலும் தெளிவாக்கி-வலுவாக்கி உள்ளார் கலைஞர்.

ஒரு கோடி புதிய வாக்காளர்கள் அதுவும் இளைஞர்கள் வாக்களிக்கப் போகின்றார்கள் என்ற புள்ளிவிவரங்களுக்கு நடுவில் கலைஞர் முன்னிறுத்தும் குடும்ப அரசியல் எடுபடுமா? வாக்குகளைக் கொண்டு வந்து சேர்க்குமா?

சந்தேகம்தான்!

அழகிரியின் வரவால் ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் திமுக வாக்குகள் மீண்டும் ஒன்றிணையும்- ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் அடிமட்ட அளவில் ஓரளவுக்கு இணைந்து பணியாற்றுவார்கள் என்பது தவிர, ஏற்கனவே இருக்கும் திமுக வாக்குகளை மறு உறுதி செய்வதாகத்தான் அழகிரியின் வரவு பார்க்கப்படும்.

மற்றபடி, புதிய வாக்காளர்களை ஈர்ப்பதற்கோ –

இன்றைய நிலையில் தமிழகத் தேர்தல் களத்தில் மீண்டும் ஆட்சி பீடத்தை அமைப்பதற்கோ –

அழகிரியின் மறு-வரவு எந்த விதத்திலும் உதவாது என்பதுதான் இன்றைய உண்மை நிலை!

-இரா.முத்தரசன்