Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: ஜீரோ – முதல் பாதி அச்சம்! இரண்டாம் பாதி ஆச்சர்யம்! அட்டகாசமான திரையரங்கு அனுபவம்!

திரைவிமர்சனம்: ஜீரோ – முதல் பாதி அச்சம்! இரண்டாம் பாதி ஆச்சர்யம்! அட்டகாசமான திரையரங்கு அனுபவம்!

972
0
SHARE
Ad

Zeroகோலாலம்பூர் – ‘ஜீரோ’, பெயரிலேயே தமிழ் சினிமாவின் ‘பெயர்’ நம்பிக்கைகளை உடைத்து எறிந்து விட்டதைப் போல், படத்தின் கதை மற்றும் இயக்கத்திலும் வழக்கமான தமிழ் சினிமா பாணியிலான திகில் படங்களைப் போல் அல்லாமல் ஒரு வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தைத் தருகின்றது இந்தப் படம்.

ஒரு சின்ன பிசகு ஏற்பட்டிருந்தால் கூட ரசிகர்களைக் குழப்பிவிடக் கூடிய வகையில், சவாலான திரைக்கதையை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் ஷிவ் மோகா, அதை சாமர்த்தியமாகக் கையாண்டு குழப்பமின்றி தெளிவாகக் காட்சிகளில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.

இன்றைய சூழலில் வாரந்தோறும் வரிசைக் கட்டி காத்திருக்கும் படங்களுக்கு மத்தியில் ஒரு சில படங்களே திரையரங்கு அனுபவத்தைக் கொடுக்கின்றன.

#TamilSchoolmychoice

அந்த வகையில் ‘ஜீரோ’ கட்டாயம் திரையரங்கு சென்று பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒரு இம்சையான பயம்.. இதமான காதல்.. நெகிழவைக்கும் கிளைமாக்ஸ்..

ஆனால் இந்த அனுபவம் எந்த மாதிரியான ரசிகர்களைத் திருப்திபடுத்தும்? விமர்சனத்தின் கடைசியில் சொல்கிறேன்.

நடிப்பு

அஷ்வின் .. நடிப்பில் கடும் உழைப்பு நன்றாகத் தெரிகின்றது. காதல், கண்ணீர், பயம், பாசம் என உணர்வுகளை முகபாவணைகளிலும், உடல்மொழிகளிலும் அவ்வளவு அழகாகக் கொண்டு வந்திருக்கிறார்.

Zero-Movie-11“சும்மா சொன்னியா.. ச்சே… உண்மையில அங்க ஏதோ இருக்குன்னு பயந்துட்டேன்” என்று கூறி ஒரு காட்சியில் அப்படியே தனது முகத்தில் அவர் காட்டும் அதிர்ச்சி நமது அடிவயிற்றைப் பிசைகிறது.

அடுத்ததாக, கதாநாயகி ஷிஸ்வதா.. நெடுஞ்சாலை படத்திற்குப் பிறகு மிகச் சிறப்பான கதாப்பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். தமிழில் முன்னணி கதாநாயகிகளுக்கு கூட இப்படி ஒரு படம் கிடைத்ததில்லை என்று சொல்லலாம்.

கடையில் லிப்ஸ்டிக் வாங்கும் அந்தக் காட்சி, மாடிப்படிகளில் இருந்து உருண்டு விழும் காட்சி, பக்கத்து வீட்டு அம்மாவின் மீனைக் கண்டு அதிர்ச்சியடையும் காட்சி … அப்பப்பா.. ஷிஸ்வதாவின் நடிப்பு அற்புதம்…

அடுத்ததாக, ஜே.டி.சக்ரவர்த்தி.. படத்தில் நம்மை முதலில் மிரட்டுவது இவர் தான், பின்னர் அடுத்தடுத்த காட்சிகளில் அப்பாடா இவர் இருக்கிறார்..அவர்களைக் காப்பாற்றிவிடுவார் என்று நம்மை ஆசுவாசப்படுத்துவதும் சக்ரவர்த்தி தான்..

Zero-Movie-17கதாநாயகியின் அம்மாவாக வரும் நடிகைக்கு வசனமே இல்லை. ஆனால் அவரது முகமும், கண்களுமே மிரட்டுகிறது. அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற முகவெட்டு.

இவர்களோடு, அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா மற்றும் துளசியின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

திரைக்கதை

இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பு குறித்து சொல்லியே ஆக வேண்டும். மனநல பாதிப்பு போல் தொடங்கி பின்பாதியில் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் ஆச்சர்யத்தைக் கொடுக்கின்றது.

Zero 1ஒரு சில காட்சிகளில் யாருக்கு மனநல பாதிப்பு ஹீரோவிற்கா, ஹீரோயினுக்கா அல்லது சக்ரவர்த்திக்கா என்று நாம் பார்த்த பழைய படங்களையெல்லாம் அலசிப் பார்க்கத் தொடங்கிவிடுகின்றோம். அந்த அளவிற்கு கணிக்கவே முடியாத அளவிற்கு காட்சியமைப்புகள்.

முதல் பாதியில் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்து இருக்கையின் நுனிக்கு வந்துவிட்ட ரசிகர்களை இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி, மீண்டும் மருத்துவமனை பல்பு காட்சி ஒன்றின் மூலம் சுவாரஸ்யத்தின் உச்சத்திற்குக் கொண்டு போயிருக்கிறது திரைக்கதை.

ஒளிப்பதிவு, இசை

பாபு குமாரின் ஒளிப்பதிவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், தேவாலயம் ஆகியவை ரசிக்க வைக்கின்றன. ப்ளாஷ்பேக் காட்சியில் வண்ணத்தை மாற்றியிருப்பது அழகு.

படம் முழுவதும் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் நம்மை ஓரளவு திருப்திபடுத்துகிறது. என்றாலும், பாம்பு, சிவப்பு வானம், அந்த ‘மரம்’ காட்சிகளை இன்னும் கொஞ்சம் இயல்பாகத் தெரியும் படி அமைத்திருக்கலாம்.

இந்தப் படத்தில் மெயில்சிலிர்க்க வைக்கும் காட்சிகளுக்கு பின்னணி இசை முக்கியப் பங்கு வகிக்கின்றது. காதலுக்கான காட்சிகளுக்கு ஒரு வகை பின்னணி இசையும், சைக்கோத்தனமான காட்சிகளுக்கு ஏற்ப வேறு வகையான பின்னணி இசையையும் வழங்கி சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் நிவாஸ் பிரசன்னா..

யாருக்கான படம்?

இது ஜாலியா சிரித்துக் கொண்டே பார்த்து ரசிக்கும் படியான காமடி, கவர்ச்சி கலந்த பேய் படம் இல்லை என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அண்மைய காலமாக பேய் படம் என்றாலே காமெடிப் படம் என்று நினைக்கும் அளவிற்கு 1 டஜன் படங்கள் வந்துவிட்டன. இது உண்மையில் மிரட்டும் திகில் படம்.

Zero-Movie-12முதல் பாதியில் கதாநாயகியின் மனநல பாதிப்பு காட்சிகளும், அதற்கு ஏற்ப பின்னணி இசையும் நம்மை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு போய்விடுகின்றது.

இரண்டாம் பாதியில் ஹாலிவுட்டின் பேண்டசி சினிமா பாணியில் ஒரு கதை சொல்லப்படுகின்றது. அதில் பல ஆச்சர்யங்கள் உள்ளன.

எனவே, வித்தியாசமான சினிமா ரசிகர்களுக்கும், ஹாலிவுட் பட ரசிகர்களுக்கும் தமிழில் இப்படி ஒரு படம் வந்திருப்பது வரப்பிரசாதமாகவே தெரியும்.

மொத்தத்தில் ஜீரோ – முதல் பாதி அச்சம்! இரண்டாம் பாதி ஆச்சர்யம்! அட்டகாசமான திரையரங்கு அனுபவம்!

(குறிப்பு: இப்படி ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து மலேசியத் திரையரங்குகளுக்குக் கொண்டு வந்திருக்கும் எம்எஸ்கே நிறுவனத்திற்கு (MSK Film Productions) நன்றியும், வாழ்த்துகளும்..)

-ஃபீனிக்ஸ்தாசன்