கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை காலை தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த மூன்று இந்தியக் குற்றவாளிகள் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் இரகசியமாக தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
அவர்களின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு மலேசிய வழக்கறிஞர்கள் மன்றம் அறைகூவல் விடுத்திருந்தது.
அவர்களின் வழக்கறிஞரான பாலையா ரெங்கையா, தண்டனைக் கைதிகளின் குடுமத்தினருக்கு இரண்டு நாட்கள் முன்னறிவிப்பு மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் வெள்ளிக்கிழமை காலை 4.30 முதல் 5.30 மணிக்குள் அவர்கள் இரகசியமாகத் தூக்கிலிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குணசேகர் பிச்சைமுத்து (35 வயது), ரமேஷ் ஜெயகுமார் (34 வயது) ரமேஷின் சகோதரர் சசிவர்ணம் ஜெயகுமார் (37 வயது) ஆகியோரே தூக்கிலிடப்பட்ட அந்த மூவர்.
2005ஆம் ஆண்டில் 25 வயதான ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தாங்கள் தற்காப்புக்காகவே தாக்குதல் நடத்தியதாக அந்த மூவரும் நீதிமன்றத்தில் வாதம் புரிந்தனர்.
இதற்கிடையில் மேலும் 1,000 பேர் மலேசிய சிறைகளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்திருப்பதாகவும், 2013 முதல் இதுவரை யாரும் தூக்கிலிடப்படவில்லை என்றும் சிறை இலாகா ஏற்கனவே அறிவித்துள்ளது.