பிரசல்ஸ் – பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அதற்குப் பின்னணியில் இருந்தவர்களைக் கைது செய்ய, மேற்கு ஐரோப்பா நாடுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வரும் வேளையில் பெல்ஜியம் காவல் துறையினர், பல பேரைக் கைது செய்துள்ளதுடன், ஒருவனைக் காலில் சுட்டு, வளைத்துப் பிடித்துள்ளனர்.
நேற்றைய தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்ட நஜிம் லாச்சாரோய் இவன்தான்….
இதுவரை 31 உயிர்களைப் பலிவாங்கி, 300 பேருக்கு காயங்கள் ஏற்படுத்தியுள்ள இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பான தேடுதல் வேட்டையில், பிரசல்சையும், பாரீசையும் குறிவைத்திருந்த பயங்கரவாத அமைப்பினர் துடைத்தொழிக்கப்படுவதாக பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹோல்லாண்ட் அறிவித்துள்ளார்.
34 வயதான ரெடா கிரிகெட் என்ற சந்தேகப் பேர்வழியை பாரீசில் கைது செய்த பிரெஞ்சு நாட்டுக் காவல் துறையினர் அவனது வீட்டில் வெடிகுண்டுகளைக் கண்டெடுத்தனர். இதன் மூலம் பாரிசில் மேற்கொள்ளப்படவிருந்த மற்றொரு தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கின்றது என காவல் துறையினர் நம்புகின்றனர்.
பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த அப்டில் ஹாமிட் அபோட் என்பவனுக்கு ரெடா நண்பன் என்றும் பெல்ஜியத்தில் இருவரும் சேர்ந்து சில குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்றும் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் புதிய புலனாய்வுத் தகவல்களைத் தொடர்ந்து பெல்ஜியம் காவல் துறையினர் மேலும் மூவரைக் கைது செய்துள்ளனர்.
பகல் நேரத்தில் ஒருவனைக் கைது செய்யும் முயற்சியின்போது அவன் தப்பி ஓட முயற்சி செய்ய, அவனது கால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவனைக் கைது செய்துள்ளனர்.
போலீஸ் தேடுதல் வேட்டையின் போது வெடிகுண்டுகள் தயாரிக்கும் மையம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் வேட்டையின் போது துப்பாக்கிச் சூடுகள் சத்தம் கேட்டதாகவும், ஓர் இடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் முதலில் தகவல்கள் வந்தன.