Home Featured தமிழ் நாடு பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எச்.ராஜா, வானதி போட்டி!

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எச்.ராஜா, வானதி போட்டி!

626
0
SHARE
Ad

bjpபுதுடெல்லி – தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் 54 பேர் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. மேலிடம் நேற்று இரவு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு வரும் மே 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர்களின் பட்டியலுடன் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லி சென்றனர்.

இதைத் தொடர்ந்து வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக அக்கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான பிரகாஷ் ஜாவடேகர், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தேசிய பொதுச் செயலர் முரளிதர்ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மாநில துணைத் தலைவர் மோகன்ராஜுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பின், இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களின் முதலாவது பட்டியலை மத்திய அமைச்சரும் தேர்தல் குழு செயலாளருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.பி.நட்டா, செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கட்சித் தொண்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது தொடர்பாக மேலிடம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. விரைவில் அவர் போட்டியிடும் தொகுதியின் பெயர் அறிவிக்கப்படும்.

பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ள இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தேவநாதன் யாதவ் தலைமையிலான இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவற்றுடன் தொகுதிப்பங்கீடு பேச்சு நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க. போட்டியிடும் மற்ற தொகுதிகளின் விவரம் விரைவில் வெளியிடப்படும்’ என்றார்.