வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி (ஒபாமா) மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய இரு கட்சிகளிலும் மாகாண அளவில் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முன்னிலை பெறும் வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்.
ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் 68 வயது ஹிலாரி கிளிண்டனும், 74 வயது பெர்னி சாண்டர்சும் களத்தில் உள்ளனர். பெரும்பாலான மாகாணங்களில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் வாஷிங்டன், அலாஸ்கா, ஹவாய் ஆகிய 3 மாகாணங்களிலும் நடந்தது. இந்த 3 மாகாணங்களிலும் சாண்டர்ஸ் அபார வெற்றி பெற்றார்.
வாஷிங்டனில் சாண்டர்சுக்கு 72 சதவீதமும், அலாஸ்காவில் 80 சதவீதமும் ஓட்டுகள் கிடைத்தன. இதேபோல் ஹவாய் மாகாணத்தில் அவர் 70 சதவீத ஓட்டுகளை பெற்றார். இந்த முடிவுகள் கட்சியின் இன்னொரு வேட்பாளரான ஹிலாரிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது.
அதேநேரம் மாகாண தேர்தல்களில் வெற்றி பெறுவது முக்கியமானது என்றாலும் கூட, அவற்றில் கட்சி பிரதிநிதிகளின் ஓட்டுகளை பெறவேண்டியதும் மிகவும் அவசியமாகும்.
ஜனநாயக கட்சியில் 712 உயர் பிரதிநிதிகள் ஓட்டுகள் உள்பட மொத்த பிரதிகளின் ஓட்டு எண்ணிக்கை 4,763 ஆகும். இதில் 2,382 பிரதிநிதிகளின் ஓட்டுகளைப் பெறுபவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வு பெற்றுவிடுவார்.
தற்போது, ஹிலாரி கிளிண்டனுக்கு 1,703 பிரதிநிதி ஓட்டுகளும், சாண்டர்சுக்கு 985 பிரதிநிதிகள் ஓட்டுகளுமே கிடைத்துள்ளன. இதனால் ஹிகிளிண்டன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்னும் 679 பிரதிநிதிகள் ஓட்டுகளே தேவை. இதனால் அவர் கட்சி வேட்பாளர் தேர்வில் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்றே கருதப்படுகிறது.