Home Featured தமிழ் நாடு குழந்தைகளைக் கடத்துவது ரத்தமும் சதையுமாய் இதயத்தை பிடுங்கிச் செல்வது போன்றது – பார்த்திபன் உருக்கம்!

குழந்தைகளைக் கடத்துவது ரத்தமும் சதையுமாய் இதயத்தை பிடுங்கிச் செல்வது போன்றது – பார்த்திபன் உருக்கம்!

826
0
SHARE
Ad

jayalalithaa vs oarthibanசென்னை – ஆதரவற்ற குழந்தைகளுக்காக அரசு சார்பில் அம்மா குழந்தைகள் காப்பகம் தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த வருடத்தில் 656 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த நடிகர் பார்த்திபன், காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து, சென்னையில் காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி ஒரு மனு கொடுத்தார். தமிழகத்தில் தினமும் 5 குழந்தைகள் காணாமல் போகின்றனர்.

கடந்த 22-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 21 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். 2014-ஆம் ஆண்டில் 441 குழந்தைகளும், 2015-இல் 656 குழந்தைகளும், இந்த ஆண்டில் இதுவரை 450 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். இதில் மூன்றில் ஒரு குழந்தை மட்டுமே மீட்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

சென்னையில் 2014-இல் 114 குழந்தைகளும், 2015-இல் 149 குழந்தைகளும், இந்த ஆண்டில் இதுவரை 58 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர் என்று மாநில குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

இப்படி காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையைதான் காவல் ஆணையரிடம் வைத்திருக்கிறேன். அவர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். எங்களை விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் கூறியிருக்கிறார்.

அரசு சார்பில் அம்மா குழந்தைகள் காப்பகம் தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். விரைவில் தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.

காணாமல் போகும் மற்றும் கடத்தப்படும் குழந்தைகளை பலர் பிச்சை எடுக்கவும், தவறான நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துகின்றனர். சென்னையில் குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களைப் பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பார்த்திபன் கூறியுள்ளார்.