Home Featured தமிழ் நாடு “கிடைத்தது தென்னந்தோப்பு சின்னம் – ஆனால் போகப் போவது எந்தப் பக்கம்” – ஜி.கே.வாசன் திண்டாட்டம்!

“கிடைத்தது தென்னந்தோப்பு சின்னம் – ஆனால் போகப் போவது எந்தப் பக்கம்” – ஜி.கே.வாசன் திண்டாட்டம்!

807
0
SHARE
Ad

tmk-symbol1-600சென்னை – காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற ஜி.கே.வாசன் தலைமையேற்றுள்ள, தமிழ் மாநில காங்கிரசுக்கு சட்டசபைத் தேர்தலில் 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். ஆனால், இவரது கட்சிக்கு என்ன சின்னம் என்பது குறித்து யாருக்கும் ஆர்வமில்லை, மனிதர் எந்தப் பக்கம் சாயப் போகின்றார் என்பது குறித்துத்தான் தமிழக அரசியல் ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இருப்பினும் அவர் எந்தக் கூட்டணியில் இணைவார் என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அதை ஜி.கே.வாசனும் இதுவரை தெளிவுபடுத்தாமல் இருந்து வருகிறார்.

#TamilSchoolmychoice

திமுகவுடன் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்து விட்டது திமுக. இருப்பினும் தற்போது காங்கிரசோடு வாசனின் தமிழ் மாநிலக் காங்கிரசையும் தங்களின் கூட்டணியில் இணைத்துக் கொள்ள கருணாநிதி விரும்புகின்றார் என்ற தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன.

ஆனால், எந்தக் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றோமோ, அதே காங்கிரசுடன் இணைவதா என வாசன் தயங்குகின்றார். ஜெயலலிதா தரப்பிலும் வாசனை இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை தன்னோடு சேரும் கூட்டணிக் கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வாசன், “தமாகா கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு தென்னை மரங்கள் இந்த சின்னத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த சின்னத்தில்தான் சட்டசபைத் தேர்தலில் தமாகா போட்டியிடும்” என அறிவித்துள்ளார்.

ஆனால், கட்சிக் கொடியில் இந்த சின்னம் இடம் பெறாது. மாறாக பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகியோரது படங்கள் மட்டுமே கட்சிக் கொடியில் இடம் பெறும். ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தென்னந்தோப்பு சின்னத்தை அறிமுகப்படுத்தும் பிரச்சாரம் தொடங்கும் என்றும் வாசன் தெரிவித்துள்ளார்.