பெட்டாலிங் ஜெயா – தனது வங்கிக் கணக்கிற்கு வந்த நிதி குறித்து இத்தனை நாட்களாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறி வந்ததைத் தான், ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட சவுதி இளவரசரின் கடிதத்திலும் கூறியிருக்கிறது என்று பிரதமர் துறை அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.சவுதி அரேபியாவில் இருந்து வந்ததாக கசிந்திருக்கும் அந்தக் கடிதத்தில், பிரதமருக்கு அளிக்கப்பட்ட நன்கொடை இஸ்லாமை ஊக்குவிப்பதற்காகவும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காகவும் வழங்கப்பட்ட அன்பளிப்பு என்றும், பிரதிபலனாக எந்த ஒரு வேண்டுகோளும் இன்றி அன்பளிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், “இந்த நன்கொடை நேரடியாகவும், பல்வேறு நன்கொடை நிறுவனங்களில் இருந்தும் வந்தது குறித்து, விசாரணை நடத்திய மலேசிய அதிகாரிகள், சவுதி அரேபியாவிற்கே சென்று ஆய்வு செய்து, ஆவணங்களையெல்லாம் சரிபார்த்து, அரச குடும்பத்தினரை நேர்காணல் செய்து, நன்கொடை தொடர்பான அதிகாரிகளையும் சந்தித்துள்ளனர். இதை ஏபிசியும் உறுதிப்படுத்தியுள்ளது” என்றும் பிரதமர் துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.