Home Featured தமிழ் நாடு தேமுதிக அதிருப்தியாளர்களை உள்ளிழுக்கும் திமுக – பதிலடி கொடுத்த விஜயகாந்த்!

தேமுதிக அதிருப்தியாளர்களை உள்ளிழுக்கும் திமுக – பதிலடி கொடுத்த விஜயகாந்த்!

953
0
SHARE
Ad

சென்னை – தேமுதிக வடசென்னை மாவட்டச் செயலாளரும், விஜயகாந்த்தின் தீவிர ஆதரவாளருமான யுவராஜ், இன்று கலைஞர் கருணாநிதி முன்னிலையில் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்.

விஜயகாந்தின் தீவிர ஆதரவாளரான இவர், தான் திமுக-வில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் எடுத்த முடிவு தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சியை வீழ்த்த சரியான கூட்டணி அமைக்காத விஜயகாந்த்தின் பின்னால் இனியும் செல்ல நாங்கள் தயாராக இல்லை. அதனால் திமுகவுக்கு வந்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொண்டர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் விஜயகாந்த் எடுத்திருக்கும் இந்த முடிவு அதிமுக-விற்கு சாதகமாக அமையும் என்றும், அதிமுக ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்றால் திமுக-வில் இணைவது தான் தன்னைப் போன்ற பெரும்பாலான தொண்டர்களின் எண்ணமாக இருந்தது என்றும் யுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கலைஞர் வரவேற்பு:

யுவராஜ் திமுக-வில் இணைந்ததை வரவேற்றுள்ள அக்கட்சியின் தலைவர் கலைஞர் கருணாநிதி, உடனடியாக இந்தத் தகவலை தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

Yuvraj-karunanidhiயுவராஜ் இன்று கலைஞரைச் சந்தித்த போது, அவருடன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

விஜயகாந்தின் அதிரடி முடிவு:

Captain-Vijayakanth-latest-stills-9யுவராஜ் சென்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே வடசென்னை மாவட்டத்துக்கு புதிய பொறுப்பாளரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.

விஜயகாந்தின் இந்த அதிரடி முடிவு அக்கட்சியினரிடையே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், விஜயகாந்த் தமிழ்நாட்டிலேயே இல்லை என்றும், அவருக்கு உடல்நலக்குறைவு என்றும் கூறி வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இருப்பை விஜயகாந்த் காட்டியுள்ளதாகக் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக வடசென்னை மாவட்ட கழகச் செயலாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ, கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் மு.தளபதி, தலைமைச் செயற்குழு உறுப்பினராக ப.மதிவாணன் ஆகியோர் இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இவர்களுக்கு மாவட்டம், பகுதி, வட்டம், கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாபெரும் வளர்ச்சியடைய, சிறப்புடன் செயல்பட அனைவரும் பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

யுவராஜ் திமுக சென்றதையடுத்து, அடுத்து வரும் நாட்களில் மேலும் சில தேமுதிக உறுப்பினர்கள் இதே முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொகுப்பு: செல்லியல்