கோலாலம்பூர் – செராஸ் தமிழ்ப் பள்ளியும், பழமையான தோகையடி விநாயகர் ஆலயமும் அமைந்திருக்கும் பகுதியில் அரை ஏக்கர் நிலத்தில் 27 மாடிக் கட்டிடத்திற்கான அங்கீகாரம் எவ்வாறு வழங்கப்பட்டது என்ற கேள்வியுடன், அந்தக் கட்டிடத்திற்கான நிர்மாணிப்பை ரத்து செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அவர்களோடு எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் தற்போது இணைந்துள்ளன. நேற்று அந்தப் பள்ளியின் முன்னால் திரண்ட எதிர்ப்பாளர்கள், 27 மாடிக் கட்டிடத்திற்கான அனுமதியை இன்னும் 7 நாட்களுக்குள் கோலாலம்பூர் மாநகரசபை இரத்து செய்ய வேண்டும் என கெடு விதித்துள்ளனர்.
செராஸ் தமிழ்ப் பள்ளிக்காக நேற்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஊர்வலம்….
நேற்று செராஸ் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற போராட்டத்தில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணனும் ஜசெக கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மனோகரன் மலையாளமும் கலந்து கொண்டனர்.
அரை ஏக்கர் அளவுள்ள அரசாங்க நிலத்தில் 27 மாடிக் கட்டிடத்திற்கான அங்கீகாரம் எவ்வாறு வழங்கப்பட்டது என எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளதோடு, அமைச்சர் என்ற வகையில் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் இதற்கான விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு புதிய கட்டிடம்
செவ்வாய்க்கிழமை செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு வருகை தந்த துணை கல்வி அமைச்சர் கமலநாதன்…
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு வருகை தந்த துணை கல்வி அமைச்சர் ப.கமலநாதன் 2 மாடிக் கட்டிடம், 12 வகுப்பறைகள் என ஏறத்தாழ 15 இலட்சம் ரிங்கிட் செலவில் அந்தப் பள்ளி மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.
செராஸ் தமிழ்ப் பள்ளி வருகையின் போது செராஸ் தமிழ்ப்பள்ளிக்கு மிக அருகில் 27 மாடிக் கட்டடம் கட்டப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கல்வித் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளரைக் கேட்டுக் கொண்டார். கூட்டரசு பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகனுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கமலநாதன் தெரிவித்திருந்தார்.
செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு கமலநாதனோடு, தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்கான பிரதமர் துறையின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரனும் வருகை புரிந்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு வருகை தந்த கமலநாதனுடன் பிரதமர் துறையின் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைப்பாளர் என்.எஸ்.இராஜேந்திரன்….