சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய, மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். சாத்தூர், நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசிய வைகோ, முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் லோரி ஒன்று எடுத்துச் செல்லப்பட்டதாக கூறினார்.
அதில் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரூ.1000 மற்றும் ரூ. 500 அடங்கிய நோட்டுக் கட்டுகள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு அந்தக் கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார் வைகோ.
இந்நிலையில், உண்மைக்கு புறம்பாக, அவதுாறாக பேசி களங்கம் ஏற்படுத்திய வைகோ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலர் போலீசில் புகார் கூறினார். புகாரின் அடிப்படையில் திருப்போரூர் போலீசார் வைகோ மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து வைகோ கூறியதாவது; “சிறுதாவூர் பங்களா அருகே, லாரிகளில் பணம் பதுக்கப்பட்டு உள்ளது எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, என் மீது அதிமுகவினர் புகார் செய்துள்ளனர். நான் பிணையில் வெளி வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு பயந்து, ஜாமீன் வாங்க மாட்டேன். வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்” என்றார் வைகோ