கோலாலம்பூர் – தேசிய போதை ஒழிப்பு நிறுவனத்தின் தகவல் அடிப்படையில், கடந்த 2013 – ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையில், போதைப் பித்தர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேர் மலாய்க்காரர்கள் என்ற விவரம் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 88,597 புதிய போதைப் பித்தர்களில், 39,009 பேர் மீண்டும் அந்தப் பழக்கத்திற்குத் திரும்பியுள்ளதாக துணை உள்துறை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் மொகமட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் எழுப்பிய கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த நூர் ஜஸ்லான், மாநில அளவில் பினாங்கில் தான் அதிக அளவில் போதைப் பித்தர்கள் உள்ளதாகவும், இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் 18,889 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே காலக்கட்டத்தில், நாடெங்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ள போதைப் பித்தர்களின் எண்ணிக்கையில், 100,240 போதைப் பித்தர்கள் அதாவது மொத்த எண்ணிக்கையில், (78.54% பேர்) மலாய்க்காரர்கள் என்ற தகவலையும் நூர் ஜஸ்லான் அறிவித்தார்.