Home Featured தமிழ் நாடு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!

1079
0
SHARE
Ad

Daily_News_7851635217667சென்னை – சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், தலைமை செயலகம் உள்ளது. இங்கு முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலகங்கள் உள்ளன. தலைமை செயலகத்துக்குள் செல்வதற்கு மட்டும் 10 நுழைவாயில்கள் உள்ளன.

புதிதாக ஒருவர் தலைமை செயலகத்துக்குள் ஒரு வழியில் சென்றால், அதே வழியில் திரும்பி வருவது இயலாத காரியம். அந்த அளவுக்கு தொழில்நுட்பத்துடன் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோட்டை வளாகம் முழுவதும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அந்த வளாகத்தில் தலைமை செயலகம், ராணுவம் மற்றும் கப்பற்படை அலுவலகமும் இயங்குகிறது. கோட்டை வளாகத்தில் உள்ள பல கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன.

#TamilSchoolmychoice

அப்போது ஆட்சி செய்த மன்னர்கள், சண்டை வரும்போது தங்களை பாதுகாத்து கொள்ள வசதியாக பல சுரங்கப்பாதைகள், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல ரகசிய பாதை என பல தொழில்நுட்பத்தோடு இந்த கோட்டை கட்டிடம் கட்டப்பட்டது.

கோட்டைக்குள் இருந்து வாகனங்கள் வெளியே செல்லும் பாதையில் ஒரு சுவர் போன்ற பகுதி, நீண்டநாட்களாக மரப்பலகையால் மூடி வைக்கப்பட்டு இருந்தது. பல ஆண்டுகளாக இதை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். நேற்று திடீரென அந்த பலகை கீழே விழுந்தது.

அப்போது, அந்த சுவரில் பெரிய ஓட்டை இருந்ததும், அந்த ஓட்டையின் கீழே படிக்கட்டுகள் சுரங்கப்பாதைக்குள் செல்வது போன்றும் இருந்தது. இதை பார்த்து அங்கிருந்த போலீசார், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து, அந்த சுரங்கப்பாதைக்குள் இறங்கி பார்த்தனர்.

ஒருவர் அல்லது இருவர் மட்டுமே செல்லும் அந்த சுரங்கப்பாதைக்கு சுமார் 10 அடி கீழே சென்றதும் இடது புறமாக ஒரு பாதை திரும்புகிறது. வலது புறம் சுவர் எழுப்பி முற்றிலும் அடைக்கப்பட்டு உள்ளது.

பல ஆண்டுகளாக மூடியே கிடப்பதால், அந்த சுரங்கப்பாதைக்குள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். உள்ளே யாரும் செல்லாமல் இருக்க நேற்று முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோட்டை வளாகத்தில் உள்ள தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி கூறுகையில்; “கோட்டை வரை படத்தில் இதுபோன்ற பல சுரங்கப்பாதைகள் இருக்கிறது. ஆனாலும், இந்த சுரங்கப்பாதை தற்போதுதான் எங்களுக்கு தெரியவந்துள்ளது.

விஷவாயு தாக்கம் இருக்கலாம் என்பதால் உடனடியாக மனிதர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொல்லியல் துறை சார்பில் ஆய்வு செய்யப்படும். அநேகமாக இந்த சுரங்கப்பாதை கோட்டை பின்பக்கம் செல்லும் பாதையாக இருக்கலாம். கோட்டை கொடிமரத்தின் கீழ் உள்ள அறையில் கூட 3 பெரிய பீரங்கிகள் உள்ளன.

அதை வெளியே கொண்டு வர முடியாது என்பதால் அங்கேயே வைத்துள்ளோம். புதிதாக கண்டுபிடித்துள்ள சுரங்கப்பாதை, கொடி மரத்தின் கீழ் பகுதியில் உள்ள பீரங்கிகளை புகைப்படம் எடுத்து, கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.