கோலாலம்பூர் – ஹைலேண்ட் டவர் சம்பவத்தில் மீட்கப்பட்ட குழந்தையை, 23 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து மகிழ்ந்து ஒரு வாரம் ஆவதற்குள், அந்த மீட்புக் குழுவினரில் ஒருவரான யோகராஜா நடராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை மோட்டார் விபத்தில் காலமாகியிருப்பது மீட்புக்குழுவினரை மட்டுமல்ல பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரியான யோகராஜா (வயது 51) நேற்று பூச்சோங் கின்ராரா அருகே சாலை விபத்தில் மரணமடைந்தார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் அவர் ஓட்டிவந்த மோட்டார், சறுக்கிச் சென்று சாலைத் தடுப்பில் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்று முதற்கட்ட அறிக்கை கூறுகின்றது.
யோகாராஜின் திடீர் மரணத்தால் அவரது குடும்பம் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
“எனது தந்தை தான் எனக்கு ஹீரோ. ஆனால் இதை நான் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். என்னுடைய குடும்பத்தை நான் தான் கவனிக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
23 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஹைலேண்ட் டவர் துயரச் சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நூர் ஹமிடா நாட்ஜிப் (இப்போது வயது 24) தன்னைக் காப்பாற்றிய மீட்புக்குழுவினரை கடந்த வாரம் தான் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்தார்.
அவர்களைச் சந்திப்பதற்காக இந்தோனிசியாவில் இருந்து அவர் தனது தாயாருடன் மலேசியா வந்திருந்தார்.
மிகவும் நெகிழ்ச்சியான அந்த நிகழ்வில், அப்பெண்ணை மீட்டவர்களில் ஒருவரான யோகராஜாவும் கலந்து கொண்டார். அதுவே அவர் பங்குபெற்ற கடைசி நிகழ்ச்சியாகவும் ஆகிவிட்டது அனைவரையும் வருந்தச் செய்துள்ளது.
கடந்த 1993- ஆண்டு, டிசம்பர் 11-ம் தேதி, உலுகிள்ளானிலுள்ள தாமான் ஹில்வியூவில் அமைந்திருந்த ஹைலேண்ட் டவரின் 1-வது அடுக்குமாடிக் குடியிருப்பு சரிந்து விழுந்தது. இதில் 48 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.