Home Featured தமிழ் நாடு கவனிக்கப்படும் அதிமுக முக்கிய வேட்பாளர்கள் # 1 – ஓ.பன்னீர் செல்வம் – போடிநாயக்கனூர் (தேனி...

கவனிக்கப்படும் அதிமுக முக்கிய வேட்பாளர்கள் # 1 – ஓ.பன்னீர் செல்வம் – போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்)

615
0
SHARE
Ad

சென்னை – அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள பிரபலமான, எதிர்பாராத, கவனிக்கப்படும் வேட்பாளர்கள் யார்?

ஜெயலலிதாவைத் தவிர்த்து மற்ற அதிமுக வேட்பாளர்களில் தமிழக அரசியல் வட்டாரங்களால் கவனிக்கப்படும் முக்கிய வேட்பாளர்கள் யார் என்பதை இந்தத் தொடரில் கண்ணோட்டமிடுவோம்.

முதலாவதாகத் தென்படுபவர் ஓபிஎஸ் என அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம்!

#TamilSchoolmychoice

O-Panneerselvamசாதாரண தேநீர்க்கடை முதலாளியாக – எம்ஜிஆர் இரசிகனாக – அதிமுகவில் உயர்ந்தவருக்கு, இரண்டு முறை அதிமுக சார்பில் தமிழக முதல்வராகவே இருந்தவருக்கு, எப்போதுமே ஜெயலலிதாவுக்கு அடுத்த இடம் நிரந்தரமாக இருந்தது. அண்மையக் காலம் வரை!

சமீபத்தில் ஜெயலலிதா அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்கின்றார் என்ற தகவல்கள் ஓபிஎஸ்-சின் செல்வாக்கை வெகுவாகக் குறைத்தது. அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது, இதோடு அவர் கதை அதிமுகவில் முடிந்தது என எழுந்த ஆரூடங்களுக்கு மத்தியில் திடீரென மீண்டும் போயஸ் கார்டனுக்குள் நுழைந்து முதல்வரைச் சந்தித்தார்.

நிலைமை மீண்டும் சுமுகமாக, போடிநாயக்கனூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார். கடந்த 2011 தேர்தலிலும் இதே போடிநாயக்கனூர் தொகுதியில்தான் அவர் வெற்றி பெற்றார்.

இந்த முறை தேர்தல் வேட்பாளர்கள் வரிசையைப் பார்க்கும்போது, ஜெயலலிதா, பழையவர்களை, குறிப்பாக அதிமுகவில் நீண்ட காலம் இருக்கும் பாரம்பரியம் கொண்டவர்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நல்ல நடைமுறையைக் கையாண்டிருக்கின்றார் என்பது புலப்படும்.

அதே போல், கட்சியில் ஓரளவுக்கு செல்வாக்குள்ள, குறிப்பாக தொகுதியில் செல்வாக்குள்ள சிலர் மீது கைவைக்காமல் முடிவெடுத்துள்ளார் ஜெ. போட்டிகள் கடுமையாக இருக்கும் என்பதால், தொகுதிகளில் ஏற்கனவே நன்கு பிரபலமான பலரை மீண்டும் தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

இருப்பினும் 70 சதவீத வேட்பாளர்கள் புதியவர்கள் என்பதும் கவனிக்கத்தக்க மற்றொரு அம்சம்.

ஓபிஎஸ் வென்றால், மீண்டும் பழைய மவுசு கிடைக்குமா? குறைந்த பட்சம் அமைச்சர் பதவியாவது கிடைக்குமா? என்பது அடுத்து அதிமுகவில் எழுந்திருக்கும் ஆரூடங்கள்!

-செல்லியல் தொகுப்பு