Home Featured நாடு பனாமா பேப்பர்ஸ் குறிப்பிடும் நஜிப் மகன் – விவரங்கள் என்ன? பின்னணி என்ன?

பனாமா பேப்பர்ஸ் குறிப்பிடும் நஜிப் மகன் – விவரங்கள் என்ன? பின்னணி என்ன?

670
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ‘முகமட் நசிபுடின் பின் முகமட் நஜிப்’ – இதுதான் பனாமா பேப்பர்ஸ் ஆவணகங்கள் வாயிலாக சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பிரதமர் நஜிப்பின் இரண்டாவது மகனின் முழுப் பெயர்.

Mohd Nazifuddin Najib-featureநஜிப்பின் முதலாவது மனைவிக்குப் பிறந்த இரண்டாவது மகன் இவர். அசப்பில் இளவயது நஜிப்பை நினைவுபடுத்துபவர். வயது 32-தான். அதற்குள் பல்வேறு தொழில்களில் மிகப் பெரிய முதலீட்டாளராக உருவெடுத்திருப்பவர்.

தொழில்நுட்பம், மின்சக்தி, நிதி, நவீனப் போக்குவரத்து என பலதரப்பட்ட நிறுவனங்களில் பங்குதாரராகத் திகழும் நசிபுடின், கடந்த ஆண்டு மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் உதவித் தலைவர்களில் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

#TamilSchoolmychoice

திடீரென எப்படி இந்த இளம் வயதில் இத்தனை பெரிய செல்வம் இவருக்குக் கிடைத்தது? எங்கிருந்த வந்த பணத்தை இவ்வாறு முதலீடு செய்கின்றார் என இணையத் தளங்களில் மறைமுகமாக சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருந்த இவரது பெயர் தற்போது பனாமா பேப்பர்ஸ் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.

பனாமா பேப்பர்ஸ் தெரிவிப்பது என்ன?

தனது தந்தை அதிகாரத்தில் இருக்கும் போதே இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களை (offshore companies) நசிபுடின் உருவாக்கியிருக்கின்றார்.

மொசாக் ஃபொன்செகா வழக்கறிஞர் நிறுவனம் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்த ஜே மரியோட் இண்டர்நேஷனல் லிமிடெட் (Jay Marriot International Ltd) என்ற நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்களில் ஒருவராக 2009ஆம் ஆண்டில் இடம் பெற்றார் நசிபுடின். சிங் சூன் சென் (Ch’ng Soon Sen) என்பவர் மற்றொரு இயக்குநர்.

Mossack Fonseca websiteஅப்போது சிங், மலேசிய பசிபிக் கொப்பரேஷன் நிறுவனத்தில் (Malaysia Pacific Corp) இயக்குநராகவும் இருந்திருக்கின்றார். தற்போது அந்நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கின்றார். பசிபிக் கொப்பரேஷன் நிறுவனம் பெரிய அளவில் நில மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.

2012-இல் பிசிஜே இண்டர்நேஷனல் வெஞ்சர்ஸ் லிமிடெட் (PCJ International Venture Limited) என்ற பெயருடன் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் மொசாக் ஃபொன்செகா நிறுவனம் பதிவு செய்த மற்றொரு நிறுவனத்திலும் நசிபுடின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

பிசிஜே நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் மெகாட் டானிப் ஷாரிமான் பின் சஹாருடின் (Megat Daniff Shahriman bin Zaharudin) என்பவர். இவர் ஒரு வணிக மேம்பாட்டாளர். ‘ஒற்றுமை இளைஞர்’ (Youth on Unity) என்ற பெயரில் மலேசியாவின் வசதி குறைந்த குழந்தைகளின் நலன்களுக்காக, நசிபுடின் தலைமை ஏற்று நடத்தும் அரசு சாரா இயக்கத்தின் நிதி ஆலோசகராக மெகாட் டானிப் பணியாற்றி வந்துள்ளார்.

பிசிஜே நிறுவனத்தின் செயல்பாடுகள் 2013இல் நிறுத்தப்பட்டது.

இந்த விவரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பதிலளித்த நசிபுடின் பிசிஜே நிறுவனம் தனது அனைத்துலக வணிகத்துக்காக உருவாக்கப்பட்டது என்றும் அதில் வணிக நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் பின்னர் அந்த நிறுவனம் மூடப்பட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.

பசிபிக் கொப்பரேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிங், நசிபுடின் 2009இல் ஜே மரியோட் நிறுவனத்தை எடுத்துக் கொண்டது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், நிறுவனம் அமைக்கப்பட்டதிலிருந்து எந்தவித வணிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டில் நசிபுடின் ஜே மரியோட் நிறுவனத்தின் தனது பங்குகளை சிங்-கின் சகோதரியிடம் மாற்றிக் கொடுத்துவிட்டு, இயக்கநர் பொறுப்பிலிருந்து விலகி விட்டார்.

-செல்லியல் தொகுப்பு