சென்னை – நேற்று அதிமுக போட்டியிடும் 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தான் போட்டியிடவுள்ள ஆர்கே நகர் தொகுதியில் வரும் 9-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் ஜெயலலிதா, மே மாதம் 12-ம் தேதி தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். இந்தப் பயணத்தில் மொத்தம் 15 பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11-ல் கடலூர் மண்டலத்திலும், 13-ல் தருமபுரி மண்டலத்திலும், 15-ம் தேதி விருதுநகர் மண்டலத்திலும், 18-ம் தேதி காஞ்சிபுரம் மண்டலத்திலும், 20-ல் சேலம் மண்டலத்திலும், 23-ல் திருச்சி மண்டலத்திலும் அவர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.
ஏப்ரல் 25-ம் தேதி புதுச்சேரி மாநிலத்திலும், 27-ல் மதுரை மண்டலத்திலும், மே 1-ல் கோவை மண்டலத்திலும், மே 3-ல் விழுப்புரம் மண்டலத்திலும், 5-ல் ஈரோடு மண்டலத்திலும், 8-ல் தஞ்சை மண்டலத்திலும், 10-ல் நெல்லை மண்டலத்திலும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் ஜெயலலிதா, மே 12-ல் வேலூர் மண்டலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு சென்னையில் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.