Home Featured கலையுலகம் “ஹிருத்திக் ரோஷனை கைது செய்ய வேண்டும்” – நடிகை கங்கனா ரனாவுத் பரபரப்பு போலீஸ் புகார்!

“ஹிருத்திக் ரோஷனை கைது செய்ய வேண்டும்” – நடிகை கங்கனா ரனாவுத் பரபரப்பு போலீஸ் புகார்!

854
0
SHARE
Ad

மும்பை – அண்மையக் காலத்தில் மும்பையின் பாலிவுட் திரையுலகம் கண்டிராத அளவுக்கு பகிரங்கமாக, நேரடித் தாக்குதல்களை ஒருவருக்கொருவர் பரிமாறி வரும் நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை கங்கனா ரனாவுத் சண்டையில் புதிய திருப்பமாக இன்று ஹிருத்திக் ரோஷன் கைது செய்யப்பட வேண்டுமென கங்கனா மும்பை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

Hritik Roshan-Kangana Ranautநெருக்கமாக இருந்த காலகட்டத்தில் ஹிருத்திக்-கங்கனா ஜோடி….

இதுவரையில் இருவருக்கும் இடையில் வழக்கறிஞர் கடிதங்கள் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்பட்டு வந்தன. சில பகிரங்க அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.

#TamilSchoolmychoice

“கைட்ஸ்” (Kites) என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷன், கங்கனா ரனாவுத் இருவரும் இணைந்து நடித்தனர். அதன் பின்னர், “கிரிஷ் 3” என்ற படத்தில் மீண்டும் இருவரும் இணைய, அப்போது இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு, காதல் வலையில் இருவரும் வீழ்ந்தனர்.

hrithik-roshan-kangana-ranaut-krish 3கிரிஷ்-3 படத்தில் இணைந்து நடித்த ஹிருத்திக்-கங்கனா….

ஏற்கனவே, சூசனா என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளைக் கொண்டவரான ஹிருத்திக், திருமணத்திற்கு முன்னும், பின்னும் பல நடிகைகளுடன் நெருக்கம் பாராட்டியவர், கிசுகிசுக்கப்பட்டவர். சூசனா, அந்நாளைய பிரபல நடிகர் சஞ்சய் கான் என்பவரின் புதல்வியாவார். தற்போது சூசனாவிடமிருந்து விவாகரத்து பெற்றிருக்கின்றார் ஹிருத்திக். அதற்குக் காரணம் கூட அவருக்கும் கங்கனாவுக்கும் இடையில் இருந்த உறவுதான் என்ற கிசுகிசுப்பும் உண்டு.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், கட்டுமஸ்தான உடலமைப்போடு கூடிய ஆணழகன்களின் ஒருவராகவும் பார்க்கப்படும் ஹிருத்திக், முன்னாள் நடிகர், இயக்குநர் ராகேஷ் ரோஷனின் மகனாவார்.

கங்கனா ரனாவுத் வளர்ச்சி

kangana-ranautகங்கனா ஒரு விளம்பர மாடலாகவும் உலா வந்தவர் – அவரது கவர்ச்சித் தோற்றத்தில் ஒன்று….

சாதாரண நடிகையாக இருந்து பாலிவுட்டில் பலத்த போராட்டத்திற்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்த கங்கனா ரனாவுத் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது குயீன் (Queen) என்ற இந்திப் படம்.

ஒரு இனிப்புப் பலகாரக் கடையை நடத்தி வரும் சாதாரண பெண் ஒருத்தியை அவள் திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளை வேண்டாம் ஒன்று சொல்லி விட்டு சென்றுவிட, அதனால் மனமுடையும் அவள், ஏற்கனவே திட்டமிட்டபடி திருமணம் முடிந்து தான் செல்லவிருந்த தனது தேனிலவுப் பயணத்தைத் தொடர, தனியாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்கின்றார். அங்கு அவர் சந்திக்கும் வாழ்க்கை மாற்றங்களை நகைச்சுவையோடும், உணர்வுபூர்வமாகவும் விவரித்த இந்தப் படம் கங்கனாவை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று, இந்திய அரசாங்கத்தின் சிறந்த நடிகை விருதையும் பெற்றுத் தந்தது. படமும் வசூலில் மாபெரும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நம்ம ஊர் மாதவனுடன் அவர் நடித்த “தனு வெட்ஸ் மனு” (Tanu Weds Manu) படமும் வசூலில் சக்கைப் போடு போட்டது.

Hritik Roshan-Sussanne

அண்மையில் விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி சூசனாவுடன் ஹிருத்திக்…

இந்த சூழலில்தான், கடந்த ஜனவரியில் ‘ஆஷிக் 3’ என்ற படத்தில் இருந்து நீக்கப்பட்டார் கங்கனா. அதற்குக் காரணம் அந்தப் படத்தின் ஹீரோவான ஹிருத்திக்தான் என அவர் புகார் கூற, “முன்னாள் காதலர்கள் சில சமயங்களில் இதுபோன்ற விஷமத் தனங்களில் ஈடுபடுவார்கள்” என்ற தொனியில் கங்கனா அறிக்கை விட, அதைக் கொளுத்திப் பெரிதாக்கின தகவல் ஊடகங்கள். இருவரின் பழைய காதல் விவகாரங்களும் வெளிச்சத்திற்கு வந்தன.

கங்கனாவுக்கு பதிலடி கொடுக்க நினைத்த ஹிருத்திக் “போப்பாண்டவருடன் காதல் சந்திப்புக்கு போனாலும் போவேனே தவிர, கங்கனாவுடன் போக மாட்டேன்” என்ற தொனியில் டுவிட்டரில் தட்டி விட, அது கிறிஸ்துவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது தனியான இன்னொரு கிளைக் கதை.

போலீஸ் கமிஷனருக்குக் கடிதம்

kangana-ranaut-and-hrithik-roshanகங்கனாவும்-ஹிருத்திக்கும் இணைந்து நடித்த தருணங்களில் – நெருக்கத்துடன் அமர்ந்து அளித்த ஒரு பேட்டியின்போது…

இன்று மும்பை தகவல் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி, கங்கனாவின் வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் என்பவர் மும்பை காவல் துறை ஆணையருக்கு (போலீஸ் கமிஷனர்) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக்  கடிதத்தில், ஹிருத்திக்கும், கங்கனாவும் காதலில் இருந்தபோது, இருவருக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட அந்தரங்க இணைய அஞ்சல்களை தவறான நோக்கத்துடன் ஹிருத்திக் மூன்றாம் தரப்பிடம் வெளியிட்டுள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். ஹிருத்திக்குடன் கங்கனா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பதன்வழி ஹிருத்திக் கங்கனாவின் கௌரவத்திற்கும், பெண்மைக்கும் இழுக்கைத் தேடித் தந்துள்ளார் என அந்தப் புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் புகார் செய்துள்ள ஹிருத்திக், இந்திய குற்றவியல் சட்டம் (பீனல் கோட்) பிரிவு 151-இன் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்றும், மேற்கொண்டு இந்த புகாரை பிரிவுகள் 149, 150-இன் கீழ் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கங்கனாவின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், கங்கனா இன்னும் ஹிருத்திக்கு எதிராக முறையான போலீஸ் புகாரை இதுவரையில் செய்யவில்லை.

-செல்லியல் தொகுப்பு