சென்னை – முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2014-இல் வெளியான கத்தி படம் இன்னும் சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தின் கதை தன்னுடையது என்று மீஞ்சூர் கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
அதன்பின் தஞ்சையைச் சேர்ந்த அன்பு இராசசேகர் என்பவர் இது தன்னுடைய தாகபூமி என்கிற குறும்படத்தை அப்பட்டமாகத் திருடித்தான் முருகதாஸ் கத்தி படத்தை எடுத்தார் என்று குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கும், மதுரையில் ஒரு வழக்கும் நடந்துகொண்டிருக்கிறது. அப்படம் வெளிவந்த சில நாட்களில் தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கிய அன்பு இராசசேகருக்கு முருகதாஸ் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லையாம். அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை, சந்திக்க முயன்றும் முடியவில்லை என்பதற்குப் பிறகு நீதிமன்றம் போயிருக்கிறார் அன்புராசசேகர்.
இதற்கிடையே அவருக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த பலர் ஒருங்கிணைந்து முருகதாஸைக் கைத் செய்யவேண்டும் என்கிற கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் நடத்தவிருக்கிறார்கள்.
இதுபற்றி அன்பு இராசசேகரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, விவசாய அமைப்பினர் எனக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி, கத்தி படம் வெளிவந்தபின் அதைப் பார்த்ததிலிருந்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி அதற்கான நீதி கேட்டுப் போராடிக்கொண்டிருக்கிறேன், இதுவரை அவர்கள் தரப்பிலிருந்து எந்தப்பதிலும் இல்லை.
இதுபோன்றதொரு சிந்தனைத் திருட்டு இனிமேல் நடைபெறாத வண்ணம் இந்தத் திருட்டைச் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பது என் கோரிக்கை என்று சொல்கிறார். கத்தி படச்சிக்கல் நீதிமன்றத்திலிருந்து மக்கள் மன்றத்திற்கு வந்திருக்கிறது.