புதுடெல்லி – பனாமா ஆவணங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களில் 50 பேருக்கு வருமானவரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனம் மொசாக் பொன்சேகா. கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், கருப்பு பணத்தை பதுக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இதற்காக 35 நாடுகளில் கிளைகளை அமைத்துள்ளது. அங்குள்ள எச்எஸ்பிசி, யுபிஎஸ், கிரடிட் சூசே, டெட்ஸ் வங்கி உட்பட 500_க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் மொசாக் பொன்சேகா நிறுவனத்துக்கு கடந்த 1970_ஆம் ஆண்டுகளில் இருந்து நெருங்கிய தொடர்பு உள்ளது.
பனாமா நாட்டைச் சேர்ந்த ‘மொசாக் பொன்சேகா’ என்ற சட்ட நிறுவனத்திலிருந்து 11.5 மில்லியன் ஆவணங்கள் கசிந்ததில், உலக நாடுகளின் தலைவர்களும், பிரபலங்கள் தங்களின் கருப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கிய விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பனாமா லீக்ஸ் ஆவணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர்கள் கே.பி.சிங்(டி.எல்.எப்), கவுதம் அதானியின் அண்ணன் வினோத் அதானி உட்பட பலரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் பற்றி விசாரிக்க வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஐஸ்வர்யாராய், அமிதாப் பச்சன் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர்.
இந்நிலையில், பனாமா விவகாரம் பற்றி 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மோடி நிதியமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உட்பட இந்த பட்டியலில் இடம் பெற்ற சுமார் 50 இந்தியர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு இரண்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஒரு நோட்டீசில், பனாமா பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர் நீங்கள்தானா? பணம் பதுக்கி வைத்தது உண்மையா எனவும், மற்றொரு நோட்டீசில் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளீர்கள்.
முதலீடு செய்யப்பட்ட தொகை, பரிவர்த்தனை விவரங்கள், சொத்து விவரங்கள், முதலீட்டுக்கான அனுமதி பெறப்பட்டதா உட்பட அனைத்தையும் 3 நாளில் சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.