Home கருத்தாய்வு தியான் சுவா என்றால் உடனடியாகப் பாயும் சட்டம் இப்ராகிம் அலி என்றால் பதுங்குவது ஏன்?

தியான் சுவா என்றால் உடனடியாகப் பாயும் சட்டம் இப்ராகிம் அலி என்றால் பதுங்குவது ஏன்?

542
0
SHARE
Ad

2649d9e339053465ed86fd7d8a9ab74aமார்ச் 16 – சபாவில் சுலு படையினரின் ஊடுருவலுக்கு அம்னோ கட்சியினர் தான் காரணம் என்று கருத்து கூறியதற்காக பி.கே.ஆரின் உதவித் தலைவர் தியான் சுவா மீது தேசிய நிந்தனைச் சட்டம் உடனடியாகப் பாய்ந்துள்ளது.

அவர்மீது காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்ட வேகம் – அதைவிட வேகத்துடன் செயல்பட்ட காவல் துறையினர் அவரையும், சம்பந்தப்பட்டவர்களையும் உடனடியாக தீவிரமாக விசாரித்து ஓரிரண்டு நாட்களுக்குள்ளாகவே வழக்கைப் பதிவு செய்து நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தனர்.

கடந்த வியாழக்கிழமை இவ்வழக்கு தொடர்பாக கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தியான் சுவா ஆஜராக வந்த போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூட பார்க்காமல் காவல்துறையினர் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

காவல்துறையினரின் இந்த செயல் நமக்கு என்ன கூற வருகிறது?

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், நாட்டை ஆள்பவராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்ற கொள்கையை மறு உறுதிப் படுத்துகிறதா?

அல்லது எதிர்க்கட்சியினர் என்றால் மட்டும்தான் இப்படி நடந்து கொள்வோம் என்று மலேசியர்களுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்துகின்றதா?

மக்களின் மனதிற்குள் இதுபோன்ற கேள்விகள் எழுவது நியாயம் தானே?

இப்ராகிம் அலி பேசாத தேச நிந்தனை வாசகங்களா?

அம்னோவுக்கு எதிராக பேசியதை, அரசாங்கத்திற்கு எதிராகப் பேசியதாக  தியான் சுவா மீது தேச நிந்தனைச் சட்டம் பாய முடியும் என்றால்,கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் மலாய் மொழியில் வெளிவந்த போது ‘அல்லாஹ்’ என்ற சொல் அதில் பயன்படுத்தப்பட்டிருந்த காரணத்திற்காக அதை எரிக்குமாறு முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்த பெர்காசா தலைவரான இப்ராஹிம் அலி மீது என்ன விசாரணை நடத்தப்பட்டது?

இதுவரை ஏன் அவர் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை?

பல்லின மக்கள் வாழும் இந்த மலேசிய மண்ணில் இனவெறியைத் தூண்டும் வகையில் ஹிந்துக்களுக்கு எதிராகப் பேசிய கல்விமான் ரிதுவான் டி என்ற நபர் மீது என்ன சட்டம் பாய்ந்தது?

இந்திய சமுதாயத்தில் பலரும் – ஏன் ம.இ.கா தேசியத் தலைவரும், பிரதமர் துறை அமைச்சருமான பழனிவேல் கூட ரிதுவான் மீது நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.ஆனால், இதுவரை அவர்கள் மீது அரசாங்கமோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவ்வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது ஏன்? நீதியையும், நேர்மையையும் நிலை நாட்ட வேண்டுமென்றால், அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் நடைமுறையில் இருக்க வேண்டும்.

குற்றம் புரிந்தவர் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அவ்வாறு செய்யும் போது தான் மக்களுக்கு அந்த நாட்டின் மீதும், அதன் சட்ட ஒழுங்குகளின் மீதும் நம்பிக்கை பிறக்கும்.

அதை விடுத்து எதிர்கட்சியினர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் புயல் வேகத்திலும், அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பூங்காற்றைப் போல மெதுவாகவும் இருப்பது எந்த வகையில் நியாயம்?

இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற நியாயவாதிகள், நடுநிலை வாக்காளர்கள் – அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தேசிய முன்னணி மீது வெறுப்புணர்வு எழுவதும் அல்லது கூடுதலாவதும் நிச்சயம்!

அத்தகைய வெறுப்புணர்வு எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான வாக்குகளாக மாறப்போகும் சாத்தியங்களும் அதிகம்!