அருப்புக்கோட்டை – இன்று மதுரையை அடுத்துள்ள அருப்புக் கோட்டையில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடர்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கச்சத் தீவு பிரச்சனை குறித்து விரிவாகப் பேசியதுடன், கச்சத் தீவை தாரை வார்த்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி என்று சாடினார்.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணியளவில் உரையாற்றத் தொடங்கிய கம்பீரமான குரலில், தொய்வின்றி ஏறத்தாழ ஒரு மணிநேரம் உரையாற்றினார். அவரது உரையை தமிழகத்தின் முக்கிய செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகள் நேரலையாக ஒளிபரப்பின.
தனக்கு இராசியான பச்சை நிற சேலையில் அமர்ந்து கொண்டு உரையாற்றிய ஜெயலலிதா சுற்று வட்டார தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினார்.
அருப்புக்கோட்டையில் உரையாற்றும் ஜெயலலிதா (படம் நன்றி: தந்திடிவி டுவிட்டர் பக்கம்)
“முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்த கருணாநிதி பேராசையினால்தான் கடல் எல்லையைத் தாண்டி மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்கின்றார்கள் என மீனவர்களை கொச்சைப் படுத்தி பேசியுள்ளார்” என்றும் ஜெயலலிதா தனது உரையில் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களின் மீன்பிடிப் படகுகளைக் கைப்பற்றுவதற்கு கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதுதான் காரணம் என்று சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது, வாய்மூடி மௌனமாக இருந்தவர் கருணாநிதி என்றும் இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையையும் அப்போதே எடுக்கவில்லை – அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், கச்சத் தீவை நாம் மீட்டிருக்க முடியும் என்றும் கூறினார்.
1960ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்திய நாட்டின் எந்த ஒரு பகுதியும், மற்ற நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலுடன்தான் அவ்வாறு செய்யப்பட முடியும் என்றிருந்த நிலையில் முயற்சி எடுத்திருந்தால் கச்சத் தீவு தாரை வார்க்கப்படுவதைத் தடுத்திருக்க முடியும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
“தமிழகத்திற்கு பெரும் துரோகம் இழைத்தவர் கருணாநிதி. கச்சத் தீவை மீட்டெடுக்க நானே வழக்கு தொடுத்திருக்கின்றேன். பல கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். நேரடியாக அப்போதைய பிரதமர்களிடம் பேசியிருக்கின்றேன். ஆனால், கருணாநிதி அவ்வாறு போராடவில்லை” என்றும் பேசிய ஜெயலலிதா, கருணாநிதி கச்சத் தீவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.
“தமிழக சட்டமன்றத்தில் நான் கச்சத் தீவு மீட்டெடுக்கப்பட தீர்மானமும் நிறைவேற்றியிருக்கின்றேன். கருணாநிதியே கச்சத்தீவு தொடர்பில் ஒரு வழக்குப் போட்டிருக்கின்றார். ஆனால் தற்போது அவரே அதனை மறந்து விட்டார்” என்றும் ஜெயலலிதா கூறினார்.
கச்சத் தீவு மீட்கப்பட்டு மீனவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என சூளுரைத்துள்ளார் ஜெயலலிதா.
இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை மீட்டெடுக்கப்படவும் நான் போராடுவேன் என்றும் ஜெயலலிதா உறுதியளித்தார்.
-செல்லியல் தொகுப்பு