தோக்கியோ – நேற்று சனிக்கிழமை தென் ஜப்பானில் ஏற்பட்ட 2வது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் பலர் உயிருடன் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
மலைப் பிரதேசங்களில் பிளவுகள் ஏற்பட்டதுடன், நிலங்களில் ஏற்பட்ட வெடிப்புகளினால் பல வீடுகள் சிதைந்து விழுந்தன. போக்குவரத்துகள் நிலைகுத்தின. பல வீடுகளில் தீவிபத்துகள் ஏற்பட்டன. அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
பல இடங்களில் மக்கள் உயிருடன் புதையுண்டுள்ளனர் என்றும் மீட்புப் படையினர் அவர்களை மீட்க எல்லா வகையிலும் கடுமையாகப் போராடி வருகின்றனர் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
வலிமையான நிலநடுக்கத்தால் ஒரு மருத்துவமனையும் பாதிப்புக்குள்ளாகி, அதன் நோயாளிகள் வெளியேற்றப்பட வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு ஆளானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்குப்புறமான கிராமங்களைக் கொண்ட மலைப் பிரதேசமான கியூஷூ தீவு நில இடிபாடுகளினாலும், சாலைகளுக்கு ஏற்பட்ட சேதங்களினாலும், தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு 1,000க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர் என அஞ்சப்படுகின்றது.
வியாழக்கிழமை கியூஷூ தீவைத் தாக்கிய நிலநடுக்கத்தின் பாதிப்புகளிலிருந்து நாடு மீள்வதற்கு முன்னரே, நேற்று 7.0 புள்ளி அளவுள்ள வலுவான நிலநடுக்கம் தாக்கியதில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகிலிருக்கும் எரிமலை ஒன்றும் திடீரென தீப்பிழம்புகளைக் கக்கத் தொடங்கியிருக்கின்றது என்பதால் மக்களிடையே அச்சம் கூடியிருக்கின்றது. இருப்பினும் இந்த இரண்டு இயற்கைச் சம்பவங்களுக்கும் இடையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.