குயிடோ – இக்குவேடோர் நாட்டில் 7.8 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 233 பேர் பலியாயினர். ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் மண்ணில் புதையுண்டன.
தென் அமெரிக்க நாடான இக்குவேடாரின் தலைநகர் குயிடோவிலிருந்து 170 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு, நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் பல்வேறு கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் பல இடிந்து தரைமட்டமாயின.
மக்கள் உயிர்பிழைக்க வீடுகளில் இருந்தும் கட்டிடங்களில் இருந்தும் அலறியடித்து வீதிக்கு ஓடினர். துறைமுக நகரான குயாகுலில் வீடுகள் மட்டுமின்றி மேம்பாலங்களும் இடிந்தன.
அந்நாட்டு துணை அதிபர் ஜார்ஜ் கிளாஸ் அளித்த பேட்டியில், ‘இதுவரை 233 பேர் பலியாகியுள்ளனர். பல கட்டிடங்கள், வீடுகள் இடிந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.